அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் மகாத்மா காந்திக்கென பிரத்யேகமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் இந்த அருங்காட்சியகம் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கே காந்தியை கொண்டு சேர்க்கும் அரிய பொருட்களும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்க்ரீன்களின் வாயிலாக அவரை எடுத்துச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள இந்திய கான்சல் ஜெனரல் ரன்தீர் ஜஸ்வால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நியூ ஜெர்சியை மையமாகக் கொண்ட காந்தியன் சொசைட்டி மற்றும் ஆதித்ய பிர்லா குரூப் இணைந்து இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் மகாத்மா காந்திக்கென உருவாக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் மார்டின் லூதர் கிங் பவுண்டேஷனுடன் கைகோர்த்து இரு பெரும் தலைவர்களையும் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் குறித்து இந்திய கான்சல் ஜெனரல் ரன்தீர் ஜஸ்வால் கூறுகையில், நியூ ஜெர்சி காந்தியன் சொசைட்டி பதரா புட்டாலா மற்றும் பிர்லா குரூப் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை உள்ளது. நியூயார்க், வாஷிங்டன் நகரங்களிலும் காந்திக்கு சிலை உள்ளது. தற்போது நியூ ஜெர்சி நகரில் மகாத்மா காந்திக்கு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
மகாத்மாவின் உன்னத போதனைகள்:
பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.
முதலில் அவர்கள் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.
நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்.
நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.
இவ்வுலகம் மாற வேண்டும் எனில், முதலில் நீ மாற வேண்டும்!
மகாத்மா காந்தி போதனைகளில் எல்லா வயதினருக்கும் எல்லா காலத்திற்கும் பொருத்தமானவற்றில் வெகு சிலவற்றை உங்களுக்காக இங்கே பகிர்ந்துள்ளோம். இவற்றை பின்பற்றி வாழ்தலும் கூட காந்தியத்தை பின்பற்றி காந்தியை போற்றுதலே ஆகும்.
மார்டின் லூதர் கிங் கண்ட கனவு:
காந்திக்கு நிகராக ஏன் மார்டின் லூதர் கிங்கையும் நியூ ஜெர்சி அருங்காட்சியகத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தால் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.
1963-லிங்கன் சதுக்ககத்தில் மார்டின் லூதர் கிங் ஆற்றிய உரையின் சிறு துளி இதோ..
நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் ஜார்ஜியாவின் செம்மலையில், அடிமைகளின் வாரிசுகளும், அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிபியின் நிலை, அநீதியின் வெம்மையும், அடக்குமுறையின் வெம்மையும் இல்லாத சுதந்திரமும் நீதியும் நிறைந்த பாலைவனச் சோலையாக உருமாறும்.
நான் ஒரு கனவு காண்கிறேன்... அது என் நான்கு குழந்தைகளும் வசிக்கும் தேசத்தில், அவர்கள் தோலின் நிறத்தால் பேதப்படுத்தப்பட மாட்டார்கள். பதிலாக, அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். இன்று அலபாமாவில் நிற பேதத்தால் வஞ்சிக்கப்படுபவர்கள், ஒருநாள் அதே அலபாமாவில் வெள்ளை இனப் பையன்களுடனும், பெண் குழந்தைகளுடனும் சகோதர- சகோதரிகளாகக் கைகோப்பார்கள்.
இன்று நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும்; மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும்; கடினமான இடங்கள் சமமாக்கப்படும்; குறுகலான பாதைகள் நேராக்கப்படும்; கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும்; எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும் சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!"
இந்தப் பேச்சு போதும் உங்கள் கேள்விக்கு விடையளிக்க.