அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டமான `பில்ட் பேக் பெட்டர்’ முன்மொழிவு தடுக்கப்பட வேண்டும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தின் மூலம், எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களுக்கு அமெரிக்க ஒன்றிய அரசின் நிதியுதவி முதலானவற்றை உள்ளடக்கியுள்ளதாக இருக்கிறது. இதனால் நாட்டின் கடன் பெருகும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் செய்தி இதழுக்குப் பேட்டியளித்த எலான் மஸ்க், `இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியதோடு, `அரசு என்பது நடுவராக அல்லாமல் களத்தில் இறங்கி விளையாடுபவராக இருக்கக் கூடாது. வளர்ச்சியின் இடையில் வந்து அதனைத் தடுக்காமல் விலகி நிற்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்தின் சில அம்சங்கள் டெஸ்லா நிறுவனத்திற்குச் சார்பாக அமைந்தாலும், எலான் மஸ்க் பல்வேறு ஒன்றிய அரசு மானியங்கள் நிறுத்தப்படும் என்பதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் டெஸ்லா நிறுவனத்திற்குச் சீனாவுடனான உறவு சுமூகமாக இருப்பதைக் குறிப்பிட்டதோடு, சீனாவின் இன்றைய வளர்ச்சியை அமெரிக்காவின் தலைவர்கள் பாராட்டுவது மிகப்பெரிய மன மாற்றத்தைக் குறிப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதே நேர்காணலில் எலான் மஸ்க் தன்னுடைய மற்றொரு நிறுவனமான நியூராலிங்க் குறித்தும் பேசியுள்ளார். இந்த நிறுவனம் மனிதர்களையும், கணினிகளையும் இணைக்கும் மூளை - கணினி லிங்க் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர், `நாகரிகத்திற்குத் தீங்கு விளைவிப்பது குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியே’ என்று கூற, நேர்காணல் எடுத்தவர் அவரிடம் இதற்காகத்தான் உங்களுக்குப் பல குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்க, சிரித்த எலான் மஸ்க், `நான் ஒரு எடுத்துக் காட்டாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். எலான் மஸ்கிற்கு மொத்தம் 6 குழந்தைகள்.
மேலும் தன்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி என்ற பதவி என்பது பெரிதும் பொருட்படுத்தப்படுவதில்லை எனக் கூறியுள்ளார். தான் வாரத்தின் 7 நாள்களும் பணியாற்றுவதாகவும், தன்னுடைய நேரம் முழுவதையும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுள் எந்த நிறுவனத்திற்கு அதிக கவனம் தேவை என்பதைத் தேர்ந்தெடுத்துப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் `சிறந்த உருவாக்கம்’ என்று புகழப்படும் `சைபர் ட்ரக்’ என்ற வாகனத்தின் உற்பத்தி வரும் 2023ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க். இந்த வாகனம் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேலை செய்யும் எனவும், இதனை உருவாக்கும் கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.