Kuwait Fire Accident: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? அந்த கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்ட குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், "ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயமடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4:30 மணியளவில் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் கீழே குதித்துள்ளனர். அதில் சிலர் மரணம் அடைந்திருக்கின்றனர். மற்றவர்கள், தீக்காயங்களாலும் புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்திருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரங்கல் தெரிவித்த இந்தியா: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத் தீ விபத்து சம்பவத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால், கட்டிடத்தில் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.