Hunter Biden: தனது மகனான ஹண்டர் பைடன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்பதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பு:


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன், துப்பாக்கியை வாங்குவதற்காக போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். வில்மிங்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால், குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் முதல் மகன் என்ற மோசமான பெயரை ஹண்டர் பைடன்  ஈட்டியுள்ளார்.


தண்டனை என்ன?


கடந்த 2028ம் ஆண்டு கைத்துப்பாக்கி வாங்கியபோது பூர்த்தி செய்த கட்டாய படிவத்தில், தான் சட்டவிரோதமாக போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை அல்லது அடிமையாகவில்லை என ஹண்டர் பைடன் பூர்த்தி செய்து இருந்தார். ஆனால், அது தவறான தகவல்கள் என அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுதொடர்பான விசாரணையின் முடிவில், 54 வயதான ஹண்டர் பைடன் போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட  மூன்று வழக்குகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பு வழங்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  ஆனால் அடுத்த 120 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட குற்றங்களுக்காக ஒருவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், ஹண்டர் முதல்முறையாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வாய்ப்புகள் குறைவு எனவும் கூறப்படுகிறது.


தீர்ப்பை ஏற்கிறேன் - ஜோ பைடன்:


நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வெளியாகியுள்ள தீர்ப்பு, மீண்டும் அதிபராக போட்டியிடும் ஜோ பைடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. தீர்ப்பு தொடர்பாக பேசிய ஜோ பைடன், ”நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார். முன்னதாக பைடனை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்பும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கான தண்டனை விவரங்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.






மகனை அணைத்த பைடன்:


81 வயதான அதிபர் பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனுக்கு வருகை தந்தார்.  அவரை ஹண்டர் பைடன், அவரது மனைவி மெலிசா கோஹன் மற்றும் அவர்களது 4 வயது மகன் பியூ ஆகியோர் வரவேற்றனர். தீர்ப்பிற்கு பிறகு முதல்முறையாக தனது மகனை முதல்முறையாக சந்தித்த பைடன், ஹண்டரை அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் ஆதரவாகவும், எதிராகவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.