உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய தூதரகம் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆதிசிவன் மகன் கபில்நாத் ( கிவ் பகுதியிலும் ), சௌந்தரபாண்டியன் மகன் தீபன் சக்கரவர்த்தி ( உஷ்குரோத் பகுதியிலும் ) மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகின்றனர். 






போர் பதற்றம் காரணமாக நாடு திரும்ப இரு நாட்களாக விமானம் மூலம் சொந்த ஊர் திரும்ப டிக்கெட் புக் செய்திருந்தும் - விமான சேவை ரத்தானதால் இந்தியா வர முடியாமல் தவிப்பதாகவும்,  இருவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் மதுரை தெற்கு வாசல் மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உக்ரைனில் உள்ள கல்லூரியில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்து வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் தங்கள் மகனை மீட்டுத் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமாரிம்  மனு அளித்துள்ளனர். தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மாணவன் பங்கஜ்நாபன் தாயார் விஜயலட்சுமி கூறும்போது...," இன்று காலை 5 மணி வரை எங்களின் மகன்  தொடர்பு கொண்டு பேசினான். அப்பகுதியில் 150 மாணவர்கள் இருப்பதாகவும், நேற்று இரவு வரை கல்லூரியிலுள்ள விடுதியில் இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது குண்டுகள் போடும் அபாயம் இருப்பதால் வேறு இடத்திற்கு போவதாக கூறியுள்ளார். தற்போது அவரை தொடர்பு கொள்ள சிக்னல் கிடைக்காததால் பதட்டமடைந்த பெற்றோர்கள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.







 

அதே போல் சஜுகுமாரின் தாயார்  கூறுகையில்..," உக்ரைன் - ரஸ்சியா போர் நடப்பாதக சொல்கிறார்கள். இந்தியாவில் இருந்து படிக்க சென்ற மாணவர்கள்  அந்த நாடுகளில் சிக்கிக் கொண்டனர். என் மகன் சஜுகுமார் எம்.பி.ஏ படித்து வருகிறார். போர் நடப்பதால் பயமாக இருக்கிறது  இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மாணவர்களை மீட்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.






அதே போல் மருத்துவப் படிப்பிற்காக இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு சென்றுள்ள மாணவியை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் கோரிக்கை.