புண்ணிய ஸ்தலங்களில் பழமையும் புகழும் வாய்ந்தது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் 11 வடக்கே அமைந்துள்ளது. தெற்கே ராமேஸ்வரம் மட்டுமே. 126.5 அடி உயரமுடைய ராஜகோபுரம், 76 அடி உயர மேற்கு கோபுரத்துடன் உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் ஆகியவற்றுடன் விளங்கும் இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முந்தையது. ராமேஸ்வரம் பகுதி மிகவும் புண்ணிய தலமாக கருதப்படுவதால் இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ஒலைகுடாப் பகுதியில் டெல்லியை சேர்ந்ததொழிலதிபர் நிகில் நந்தா என்பவர் ஜென்சி நந்தா அறக்கட்டளை சார்பாக இந்தியாவில் உள்ள நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதன்முதலாக சிம்லாவிலும், இரண்டாவது சிலையாக குஜராத் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டிலும் அமைத்த அவர்கள் தற்போது மூன்றாவது சிலையாக புண்ணிய தலமாக உள்ள ராமேஸ்வரத்தில் 100 கோடியில் 108 அடியில் ஹனுமன் சிலையை அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளனர்.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது ராமேஸ்வரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுபே ஆகியோர் செங்கல் எடுத்து வைத்து, பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஆடலரசன், பாரதிராஜா, தாசில்தார் அப்துல் ஜபார், என்ஜினீயர் முருகன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா கூறுகையில், ராமரின் பாதம் பட்ட ராமேஸ்வரம் கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாகும். இந்தியாவில் 4 எல்லைப் பகுதிகளிலும் பிரமாண்ட அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அசாம் மற்றும் இமாசல பிரதேசம் மாநிலங்களில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவ பூமிபூஜை நடந்துள்ளது. ரூ.100 கோடியில் அமையும் இந்த சிலைக்கான பணிகள் இன்னும் 2 வருடத்தில் முழுமையாக முடியும். அடுத்தகட்டமாக குஜராத் மாநிலத்திலும் இதே போன்று அனுமன் சிலை நிறுவப்படும். ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து பக்தர்களும் வந்து தரிசனம் செய்யும் வகையில் இந்த சிலை அமைக்கப்படும் என கூறினார். அனுமன் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஹரிஸ் சந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை செய்துள்ளது.