நாசா  மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக விஞ்ஞானிகளின் சுய பகுப்பாய்வின்படி, கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவு 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






இதற்கு முன் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிகப்படியான  வெப்பநிலை பதிவானது. ஆனால் அதனை பின்னுக்கு தள்ளி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உலக மேற்பரப்பு (நிலம் மற்றும் கடல்) வெப்பநிலை 1.05 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஜூன் 2023, 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையுடன் 47-வது-தொடர்ச்சியான ஜூன் மற்றும் 532-வது-தொடர்ச்சியான மாதமாகவும் குறிக்கப்பட்டது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) பகுப்பாய்வின்படி, மிகவும் வெப்பமான ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டு இடம்பெறும் என்றும் 97% இது முதல் 5 இடங்களில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.  






நாசா நிர்வாகி பில் நெல்சன்  இது தொடர்பாக டிவிட்டர் பதிவில், "நாசாவின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இதுவரை எந்த ஜூன் மாதத்தில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு சான்றாக உலக அளவில் காற்றின் தரம் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி அதிக வெப்பநிலையால் ஏற்படும் உயிரிழப்புகள், தீவிர வானிலை மாற்றங்கள் என பல விஷயங்களை சந்தித்துள்ளோம்” என பதிவிட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக உலக அளவில் கடல் மட்டத்தின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது என NOAA விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2023 ஆம் ஆண்டு முதல் பாதி மிகவும் வெப்பமான ஆண்டுகளில் மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தாக்கது. புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.