கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர், மோசமான வானிலை காரணமாக 43 பேருடன் சென்ற விமானம் இன்று அதிகாலை தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்தவர்களை மீட்க மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


புகோபா விமான நிலையத்தில் இதுகுறித்து பிராந்திய காவல்துறை தளபதி வில்லியம் ம்வாம்பகலே கூறுகையில், "விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தண்ணீரில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது" என்றார்.


விபத்து குறித்து பிராந்திய ஆணையர் ஆல்பர்ட் சலமிலா கூறுகையில், "நிதித் தலைநகரான டார் எஸ் சலாமில் இருந்து ககேரா பகுதியில் உள்ள ஏரிக்கரை நகருக்கு 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உள்பட 43 பேர் விமானத்தில் வந்தனர். நாம் பேசி கொண்டிருந்தபோதே, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 26 பேரை காப்பாற்றி உள்ளோம். இதுவரை உயிரிழப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.


 






மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் விமானிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்" என்றார். டான்சானியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ப்ரிசிஷன் ஏர் விமானம், விபத்தை உறுதிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


அந்த அறிக்கையில், "மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 மணி நேரத்தில் கூடுதல் தகவல்கள் வெளியாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பான வீடியோ காட்சிகளில், மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்காக மீட்புப் பணியாளர்கள் தண்ணீரில் தத்தளிக்கும்போது, ​​விமானம் நீரில் மூழ்குவதை காணலாம். அவசரகால பணியாளர்கள் கிரேன்களின் உதவியுடன் கயிறுகளைப் பயன்படுத்தி விமானத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முயன்று வருகின்றனர்.


விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய அதிபர் சாமியா சுலுஹு ஹசன் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மீட்புப் பணி தொடரும் வேளையில் அமைதி காப்போம்" என பதிவிட்டுள்ளார்.


ப்ரிசிஷன் ஏர் விமான நிறுவனத்தில், கென்யா ஏர்வேஸுக்கு சொந்தமாக பங்குகள் உண்டு. இந்த விமான நிறுவனம் 1993இல் நிறுவப்பட்டது. உள்நாட்டு மற்றும் பிராந்திய விமானங்கள் மற்றும் செரெங்கேட்டி தேசிய பூங்கா மற்றும் சான்சிபார் தீவுக்கூட்டம் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு தனியார் சார்ட்டர்களை இந்த விமான நிறுவனம் இயக்கி வருகிறது.