2021ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலனியத்தின் விளைவுகள் மற்றும் அகதிகளின் வாழ்க்கைக் குறித்து பதிவு செய்ததற்காக இவருக்கு நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இலக்கியத்துக்கான நோபலை வென்றுள்ளார் அப்துல் ரசாக் குர்னா.
குன்ராஹ் 1948ம் ஆண்டு ஆஃப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள சன்சிபரில் பிறந்தவர். தற்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். கெண்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 1964ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்தபோது தனது 18வது வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். இதுவரை 10 நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் உலக இலக்கியத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசை பெறும் முதல் ஆப்ரிக்கர் இவராவார். முதன்முதலாக ஆப்ரிக்காவிலிருந்து 1986ம் ஆண்டு வோலே சொயின்கா கடைசியாக 2003ம் ஆண்டு ஜான் மேக்ஸ்வெல் கொயெட்ஜி ஆகியோர் நோபலை வென்றனர்.
அப்துல் ரசாக் குர்னா முக்கியமான பின் காலனிய எழுத்தாளர்களில் ஒருவர் என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. "கிழக்கு ஆப்பிரிக்காவில் காலனியத்தின் விளைவுகள் மற்றும் ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் வேரோடு பிடுங்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த தனிநபர்களின் வாழ்க்கையில் காலனியத்தின் விளைவுகள் குறித்து தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். “Memory of Departure,” “Pilgrims Way” ஆகியவை இவரின் முக்கியமான புத்தகங்கள். இரண்டும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் குடியேறியவரின் அனுபவங்களைப் பேசுகிறது. “Paradise” எனும் நூல் 1994ம் ஆண்டு புக்கர் பரிசுக்கு இறுதி செய்யப்பட்டது. இது ஆஃப்ரிக்காவை மையமாகக் கொண்டு முதல் உலகப்போரின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயி க்ளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குறைவான பெண் எழுத்தாளர்களுக்கே நோபல் வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியின் மீது விமர்சனம் எழுந்த வண்ணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து லூயி க்ளக் நோபலை வென்றார்.
இது கொரோனா காலமாக இல்லாதிருந்தால் வரும் டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அப்துல் ரசாக் குர்னா தனது நோபல் விருதைப் பெற்றுக்கொண்டிருப்பார். ஆனால் கொரோனா விதிமுறைகளின் காரணமாக அவரது சொந்த ஊரிலேயே வைத்து விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.