கொரோனாவால் உலகளவில் 15 கோடி பேர் ஏழைகளாயினர் என உலக வங்கி ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 10ல் 8 பேர் வறுமை நிலைக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா நோயாளி அதாவது பேசன்ட் ஜீரோ கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவி இப்போது எங்கும் நிறைந்திருக்கிறது கொரோனா.
கொரோனாவால் வேலையிழப்பு, சிறு குறு நடுத்திர தொழில்கள் முடக்கம் எனப் பல விஷயங்கள் நடந்துவிட்டன. உலகப் பணக்கார நாடுகள் கூட நிதிச்சுழலில் சிக்காமல் இல்லை. அப்படியென்றால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் நிலையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 24ல், முதல் முழு ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். அந்த ஊரடங்கு ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்பு சாரா தொழில்களின் பங்களிப்பது மிகப்பெரியது.
ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலும் மிகப் பெரியளவில் முடங்கியது. ஊரடங்கால் வேலையிழந்து, தொழில் முடங்கி பலரும் தங்கள் நிலையில் இருந்து கீழே இறங்கினர். நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகவும், ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும் ஆயினர்.
இது பற்றி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 10 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 7.1 கோடி பேர் என உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை 4.8 கோடியில் இருந்து 5.9 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-2022ல் 8.3% ஆக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலையை அகற்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கெனவே உள்நாட்டுப் பூசல்கள், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்கள் இன்னும் மோசமான வறுமை நிலைக்குச் செல்வார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உடனடி தலையீட்டால் நிலையை சீரமைக்காவிட்டால் 2030க்குள் வறுமையை ஒழிப்போம் என்ற இலக்கை எட்ட முடியாது. மேலும் அதற்குள் உலக வறுமை விகிதமும் 7% ஆக அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று, வறுமை நிலையை 20 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிக மோசமான வறுமை நிலை என்பதை உலக வங்கி வரையறுத்துள்ளது. அதாவது ஒரு மனிதரின் அன்றாட சராசரி வருமானம் 1.90 டாலர் என்றிருந்தால் அந்த நபர் மோசமான வறுமை நிலையில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.