போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் பூர்விகமாக கொண்ட நபருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.


போதைப் பொருள் கடத்தல் வழக்கு


மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் ஒரு  கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாக கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரும் கைது செய்யப்பட்டார்.


இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தங்கராஜ் சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.  நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் எதிர்ப்புகளும், தண்டனையை நீக்குமாறு கோரிக்கைகளும் எழுந்தன. இதனை நிறுத்தி வைக்குமாறு சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தில் தங்கராஜ் சுப்பையாவின் உறவினர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. 


தூக்கு தண்டனை


இதனால், தங்கராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என சிங்கப்பூர் அரசுக்கு, ஐக்கிய நாடுகள் அவை வேண்டுகோள் விடுத்தது.  போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணானது எனக் கூறியுள்ளது. மேலும், தண்டனையை நாடுகள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டும் அதனை நிறைவேற்ற வேண்டும். எனவே தங்கராஜுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தியிருந்தது. 


இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது. இந்த நிலையில், தங்கராஜூவின் மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு இன்று நிறைவேற்றியது. 


11 பேருக்கு தூக்கு தண்டனை


போதைப்பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த போதைப்பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்காக மட்டும் கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் பூர்விகமாக கொண்ட தங்கராஜூக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனையாக இதுவே அமைந்தது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் முதல் நிறைவேற்றப்பட்ட 12-வது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?