சூடானில் சிக்கி தவித்த 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை, இந்திய விமானப்படை மூலம் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூடான் கலவரம்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மேலும் ராணுவம் மற்றும் மக்களிடையே கிளர்ச்சி எழுந்து கலவர பூமியாக மாறியுள்ளது சூடான்.
மீட்கப்படும் இந்தியர்கள்:
இந்நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இன்று மேலும் 135 இந்தியர்கள் IAF C-130J விமானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த விமானம் தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டாவை அடைந்துள்ளது.
முன்னதாக இன்று, IAF C-130J விமானம் மூலம் 148 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு அந்த விமானம் ஜெட்டாவை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் 278 பேர் வெளியேற்றப்பட்டனர்.
நேற்றைய தினம் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், இந்தியாவுக்கு வருவதற்கு முன், ஜெட்டாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் உள்ள போக்குவரத்து வசதியை ஆய்வு செய்தார். அங்கு வரக்கூடிய இந்தியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தீவிர ஏற்பாடு:
சூடானில் கலவரம் தீவிரமடையும் நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்தார். சுமார் 500 இந்தியர்கள் சுடான் துறைமுகத்தை அடைந்துள்ளதாகவும், அங்கிருந்து அவர்களை நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபிய நாடு நடத்திய பேச்சுவார்ததை காரணமாக சூடானில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் வரை அதாவது 72 மணி நேரம் வரை கலவரம் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.