ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை பிடித்தனர். அதிபராக அஷ்ரஃப் கனி அங்கிருந்து தப்பி ஓடினார்.


தலிபான்கள் ஆப்கானை பிடித்ததால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன.  தலிபான்கள் அங்கு இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் இந்த முறை மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பேச்சை நம்ப முடியாது என உலக நாடுகள் அச்சமடைந்தன. அதேசமயம் சீனா தலிபான்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தது.


தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. மக்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து, தங்கள் வீட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களை விற்று செலவுக்குப் பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் காட்டுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.




இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு கரன்சிகள் ஏதும் பயன்படுத்தத் தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர் என்று அல்ஜசிரா சேனல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து மக்களும், கடை உரிமையாளர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இது கண்டிப்பான உத்தரவு. இதை மீறுவோர் தண்டனைக்குள்ளாவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கன் கரன்சியின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. ஆப்கானில் பெரும்பாலும் அமெரிக்க கரன்சிகள்தான் புழக்கத்தில் இருந்த நிலையில் திடீரெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆப்கானிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதியான 950 கோடி டாலர் உதவியை உலக வங்கி, சர்வதேச நிதியம் வழங்கவிடாமல் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியுதவி நிறுத்தத்தால் ஆப்கானிஸ்தான் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.




ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தலிபான்கள் ஆட்சிக்குப் பின் மிக மோசமான சரிவை நோக்கிச் சென்றுவரும் நிலையில் தற்போது வெளிநாட்டு கரன்சிகளையும் பயன்படுத்தத் தடை விதித்திருப்பது அந்நாட்டுப் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளும் என்கின்றனர் வல்லுனர்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண