ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கிறது ஒரு பேக்கரி. அந்த பேக்கரி வாயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளோடு கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் காத்துக்கிடக்கிறார்கள். காரணம் ஒரு துண்டு பிரட்டாவது கிடைக்காதா என்ற காரணம் தான். இந்த இடத்தில் பல ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறேன். இதற்கு முன்பு நிலை இப்படி இல்லை. ஆனால் நிலமை இப்போது மோசமாகியிருக்கிறது. ஒரு துண்டு பிரட்டாவது கொடுங்கள் என்று பேக்கரி வாயிலில் பல பெண்கள் காத்து கிடப்பது அதிகரித்திருக்கிறது. இங்கு யாரிடமும் பணம் இல்லை. உண்ண உணவு இல்லை. இன்னும் கொஞ்சநாளில் இவர்களோடு சேர்ந்து நானும் பிரட் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவேன் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் பேக்கரி உரிமையாளர் ஒருவர்.




உடல் மெலிந்த இரண்டு பேரை தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது தாலிபான் அரசால் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் திருட்டில் ஈடுபட்டார்கள் என்று. திருடியது வேறு ஒன்றுமில்லை 4 பிரட்டுகளை தான். உள்ளூர் செய்தியாளர் ஏன் திருடினீர்கள் என்று கேட்டபோது என் குடும்பத்தில் கடந்த 3 நாள்களாக யாரும் சாப்பிடவில்லை. நான் திருடியிருக்கக்கூடாது தான். மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் வேறு வழியில்லை வேலையும் இல்லை; உணவும் இல்லை நான் வேறு என்ன செய்வது என்று கூறியிருக்கிறார் அவர்களில் ஒருவர்.


அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானை விட்டு சென்ற பின் அத்தனையும் தலைகீழாகிவிட்டது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தபோது ஆஃப்கானியர்கள் பலர் நாட்டைவிட்டு ஓடினார்கள். அப்படி ஓடும்போது பலர் இறந்தும்போனார்கள். காரணம் தாலிபான்கள் மக்களை நட்டாற்றில் விட்டுவிடுவார்கள் என்பதால் தான். அவர்கள் பயந்ததுபோலவே ஒட்டுமொத்த தேசத்தையும் பட்டினியில் தவிக்க விட்டிருக்கிறார்கள் தாலிபான்கள். நாட்டில் வேலையின்மை, பசி அதிகரித்திருக்கிறது. ஆனால் தாலிபான்களின் கவனமெல்லாம் பெண்களை ஒடுக்குவது, மதத்தை வளர்ப்பது, சர்வாதிகாரத்தை திணிப்பது என்று தான் இருக்கிறது.


ஆஃப்கானிஸ்தானில் பட்டினிச்சாவுகள் ஆரம்பித்துவிட்டது. தலைநகர் காபூலில் அனாதைகளான 8 குழந்தைகள் சமீபத்தில் பட்டினியால் வாடி உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இந்த பட்டினி சாவுகள் ஆப்கானிஸ்தானில் சர்வசாதாரணமாக நடக்கும் என்று எச்சரித்திருக்கிறது ஐநா. ஏற்கனவே போர், ஆயுதங்களின் பிடியில் சிக்கி வறுமையில் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் வறுமையை தாலிபான்களின் வரவு அதிகப்படுத்தியிருக்கிறது. தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்பார்களே அதேபோல தான் கொஞ்சமும் இரக்கமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனர் தாலிபான்கள். வெளிநாடுகளில் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளையும் கிடக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளின் உதவிக்கரம் ஆப்கானிஸ்தானுக்கு நீளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமும் அதள பாதாளத்திற்குப் போயிருக்கிறது.




ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சுமார் நான்கு கோடி மக்களில் இரண்டரை கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடிக்கு அதிகரிக்க வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. காரணம் தாலிபான்கள் என்கிறது WFP எனப்படும் உலக உணவு அமைப்பு. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்ற நாடுகளையே நம்பியிருந்த நிலையில், தற்போது தாலிபான்களின் வரவால் சரிந்திருக்கிறது. அஷ்ரஃப் கனி ஆட்சியை விட்டு சென்ற பின்னர் அரசு பணியாளர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லையாம். பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானியர்கள் இனி பட்டினியால் சாகப்போகிறார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


ஆப்கானிஸ்தானில் பருவகாலம் வேறு தொடங்கப்போகிறது. ஏற்கனவே குழந்தைகள் வெறும் பிரட்டை மட்டும் உண்பதால் போதிய சத்தில்லாமல் பல்வேறு நோய்களால் துன்பப்படுகின்றனர். பருவகாலம் குழந்தைகள் உயிரிழப்பை அதிகப்படுத்தப்போகிறது என்று அபாய குரல் எழுப்புகின்றனர். ஆப்கானிஸ்தானில் பேரழிவு தொடங்கிவிட்டது. இப்போது செயல்படவில்லையென்றால் விளைவு உலகமே பார்க்காத பேரழிவாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் ஐநா அமைப்பினர். குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பவும், விற்பனை செய்யவும் தொடங்கியிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பட்டினிச்சாவுகள் ஏமன் மற்றும் சிரியாவையும் குலைக்கப்போகிறது என்று எச்சரித்திருக்கிறார்கள்.


பட்டினி மற்றும் வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க தாலிபான்கள் தரப்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை விநோதமாக இருக்கிறது. தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் சமீபத்தில் பேட்டி ஒன்ற அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க ஒரு திட்டம் கொண்டு வர இருக்கிறோம். ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் வேலை வாய்ப்பை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கு சம்பளம் கிடையாது அதற்கு பதில் கோதுமை கொடுக்கபப்டும் என்றிருக்கிறார். காபூலில் மட்டும் 40000 பேருக்கு வேலை கொடுக்க திட்டம் வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் முஜாஹித். இத்திட்டத்தை வேலை வாய்ப்பின்மைக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான படி என்று கூறியிருக்கிறார்.


 




ஆஃப்கானிஸ்தானுக்கு சொந்தமான 10 பில்லியன் டாலர் வெளிநாட்டு சொத்துகளை முடக்கியிருக்கிறது அமெரிக்கா. அதை விடுவிக்கும் எண்ணமும் இல்லை என்று கூறியிருக்கிறது. ஐநா இப்போது எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ஆப்கானிஸ்தானில் பணப்புழக்கத்தை எப்படி அதிகரிப்பது என்று தான். ஆப்கானிஸ்தானுக்குள் எப்படி பணப்புழக்கத்தை அதிகரிக்கப்போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதைத்தான் நாங்களும் யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பணத்துடன் நேரடியாக ஆப்கானிஸ்தானுக்குள் செல்லும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் உலக உணவு அமைப்பின் தலைவர் மேரி எல்லன். ஆஃப்கானிஸ்தானிற்குள் ஹவாலா முறையில் சிறிய அளவிலான பணத்தை கொண்டு செல்கிறோம். மேலும் அங்கிருக்கும் வங்கிகளின் பணத்தை அடிப்படை செலவுகளுக்குப் பயன்படுத்துகிறோம் என்று கூறியிருக்கிறது ஐநாவும், மற்ற அமைப்புகளும். ஆனாலும் இந்த முறையை நீண்ட நாள்களுக்கு பயன்படுத்த முடியாது. உடனடியாக ஏதாவது செய்தே தீரவேண்டும் இல்லையென்றால் நம் கண்முன்னே லட்சக்கணக்கானோர் செத்து மடிவதை பார்க்க வேண்டி இருக்கும் என்று கவலை தெரிவித்திருக்கிறது ஐ.நா.


துப்பாக்கியால் நாட்டை வெல்லலாம். ஆனால் அரசாட்சிக்கு துப்பாக்கி மட்டும் போதாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் தாலிபான்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண