அப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.  தாலிபான்கள் கையில் அப்கானிஸ்தான் சென்றதால் பழமைவாத சட்டங்களை மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போல் கடுமையான சட்ட நடைமுறைகள் இருக்காது என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 7ஆம் தேதி தாலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், பொது இடங்களில் தலை முதல் கால் வரை முழுவதுமாக பர்தா அணிய வேண்டும். அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொடுக்க ஏற்கெனவே தடை 


இதேபோல், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலிபான்கள் பிறப்பித்துள்ளனர். சமீபத்தில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தாலிபான் அரசு தடை விதித்தது. இந்த சம்பவம் உலகளாவிய கண்டனத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கூடாது என்று ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டதற்கு பெண்கள் கார்களில் பயணிக்கலாம் தவிர பெண்கள் வாகனங்களை ஓட்ட கூடாது என தலிபான் அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தாலிபான்கள் மறுத்துவிட்டன. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டதற்கு மகளிர் அமைப்புகள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். 


செய்தி வாசிக்கும் போது முகத்தை மூட உத்தரவு


இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முகக்கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார்.

 

பெண்கள் ஓட்டலில் ஆண்களுடன் அமர்ந்து சாப்பிடத் தடை 


முன்னதாக ஆப்கானிஸ்தான் ஓட்டல்களில்  ஆண் பெண் சேர்ந்து அமர்ந்து சாப்பிட தாலிபான்கள் தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆகி கணவன் மனைவியாக இருந்தாலும் ஓட்டல்களில் சேர்ந்து அமர்ந்து உணவு சாப்பிட தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது அப்போது உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி இருந்தது.  அந்த உத்தரவில்  கணவன் மனைவி என எந்த உறவினராக இருந்தாலும், ஆண்கள் பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து கொண்டு சாப்பிட வேண்டும் என கூறப்பட்டு இருந்து. 


டிக்டாக், பப்ஜிக்கு தடை 


தாலிபான்கள் ஆட்சியை பிடித்த உடன் இசை, திரைப்படம், செய்திகள் உள்ளிட்டவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், பொழுதுபோக்கிற்கு என்பதில் பெரிய நாட்டங்கள் செலுத்தாத ஆப்கானியர்கள் இடையே தொலைபேசி பயன்பாடுகள் என்பது பிரபலமாக இருந்தது. இந்த நிலையில்,  இளம் தலைமுறையை வழித் தவறச் செய்தன என்று குறிப்பிட்டு டிக்டாக் பப்ஜி செயலியை தடை செய்வதாகவும் தாலிபன்கள் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது