பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கும் விதமாக குற்றவியல் திருத்த சட்டத்த்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு, வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், பாலியல் குற்ற வழக்குகளில் காலவரம்புக்குள் பாலியல் குற்றவாளிகளைக் கண்டறிந்து, விசாரணையை முடிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
அண்மை காலமாக, பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் சிவில் சொசைட்டி கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில், கடந்தாண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அமைச்சரவை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் குற்றவியல் சட்டத்தை நாட்டின் ஜானதிபதிக்கு பரிந்துரை செய்தது. ஜானதிபதி அரிப் அல்வியும் (Arif Alvi) இதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், இந்த சட்டத்திருத்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டது.
ஜமாத்-இ-இஸ்லாமி செனட்டர் முஷ்டாக் அகமது இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தொடர் குற்றங்கள் செய்யும் பாலியல் குற்றவாளிகள் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று கூறிய அவர், ஆண்மை நீக்கம் இஸ்லாத் மற்றும் ஷரியா சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
இந்தியா:
இந்தியாவில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 இயற்றப்பட்டது. மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது. இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடித்து, இரண்டு மாதங்களில் நீதிமன்ற விசாரணையையும் முடிப்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
முன்னதாக, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, இளம் சிறார்கள் பாலியல் வல்லுறவு செய்யும் தொடர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்