ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. தாலிபான் அமைப்பினருக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாலிபான் அமைப்பினர் ஆக்கிரமித்து வருகின்றனர்.


சமீபத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சில சட்ட விதிமுறைகளை தாலிபான் அமைப்பினர் அமல்படுத்தியுள்ளனர். அதில், பெண்கள் வீட்டை விட்டு தனியே வெளியேற கூடாது, ஆண்கள் கண்டிப்பாக தாடி வளர்த்த வேண்டும் போன்ற விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.






இதுமட்டுமின்றி, திருமணத்தின்போது பெண்கள் வரதட்சணை தர வேண்டும் எனவும் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.  இது போல, இதற்கு முன்பும் பல விதிமுறைகள் தீவிரமாக விதிக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பது, பெண்கள் வேலைக்கு செல்ல தடை விதிப்பது, ஆண்களோடுதான் பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகளை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.






இந்நிலையில், தாலிபான் அமைப்பினர் ஆக்கிரமித்திருக்கும் இடங்களில், இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றது. போர் பூமியான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் இப்போது வெளியேறி வருவதால், தாலிபான் அமைப்பினர் பல இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.






மேலும், தாலிபான் அமைப்பினர் ஆக்கிரமித்திற்கும் இடங்களில் வசிக்கும் மக்கள், காசு கொடுத்துதான் உணவு வாங்கி உண்ண வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் மக்கள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கடந்த சில வாரங்களாகவே, தாலிபான் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 400 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.