ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் ஆஃப்கானிஸ்தான் கொண்டு வந்தது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தற்போது காபூலில் உள்ள அதிபர் மாளிகையையும் தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் இன்று மாலை ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் காபூலில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்தது.
அந்த விமானத்தின் மூலம் இந்தியா வந்த பெண் ஒருவர், "உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தானை கைவிட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தலிபான்கள் என்னுடைய நண்பர்களை விரைவில் கொலை செய்துவிடுவார்கள். அங்கு இனிமேல் பெண்களுக்கு எந்தவித உரிமையையும் இருக்காது" எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆஃப்கானிஸ்தான் பெண் ஆரிஃபா, "ஆஃப்கானிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. என்னால் நிம்மதியாக சாப்பிட்டு தூங்க முடியவில்லை. அங்கு தற்போது சுதந்திரம் இல்லை. எங்களுக்கு விரைவில் சுதந்திரம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஃப்கானிஸ்தானின் இந்த நிலைக்கு தற்போது அதிபராக இருந்த அஷ்ரஃப் கனியின் நடவடிக்கையும் ஒரு காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சர்கள் சில தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வேறு நாடுகளுக்கு தப்பித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அவரும் தஜிகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த பிரச்னை எப்போது முடிவிற்கு வரும் என்பது பெரிய கேள்விக்குரியாக அமைந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் அங்கு பெண்களுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அத்துடன் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டமும் அங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரிய அச்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யார் இந்த தலிபான்கள்? உருவானது எப்படி?