சமீபத்தில், திருமணம் செய்து கொண்ட பெண்ணை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தலிபான் தளபதி தனது வீட்டிற்கு அழைத்து வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. லோகரிலிருந்து கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் மாகாணத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மணப்பெண் அழைத்து வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் மணப்பெண்ணை அழைத்து வந்திருப்பவர் தலிபானின் ஹக்கானி பிரிவு தளபதி என உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், தலிபான் தளபதி மணமகளின் வீட்டிற்கு அருகில் இறங்குவதைக் காணலாம். திருமணம் செய்து கொள்வதற்காக மணப்பெண்ணின் தந்தைக்கு தலிபான் தளபதி 1,200,000 ஆப்கானி பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
திருமணம் செய்து கொண்ட தலிபான் தளபதி கோஸ்டில் வசிப்பதாகவும், அவரது மனைவியின் வீடு லோகரின் பார்கி பராக் மாவட்டத்தில் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளது. லோகார் மாகாணத்தின் பார்கி பராக் மாவட்டத்தின் ஷா மசார் பகுதியில் சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலிபான் அமைப்பின் துணை செய்தித் தொடர்பாளர் காரி யூசுப் அஹ்மதி, "அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. எதிரிகள் தளபதி பற்றி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தலிபான் தளபதி ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் நிராகரிக்கிறது.
இதற்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது பொதுச் சொத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் உரிமைகளை தலிபான் அமைப்பு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள மனித உரிமைகள் அமைப்பின் பெண்கள் உரிமைகள் பிரிவை சேர்ந்த ஹீதர் பார், "பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை மீறும் தலிபான்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்