இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டால் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இருதய நோயாளிகள்...


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

மருந்து பற்றாக்குறை , சத்துமிக்க உணவுகள், மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் பற்றாக்குறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இலங்கையில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக   சுமார் 15,000 இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோர் என பெரும்பாலானோரின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் நோயாளர்கள் தற்போது மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என இலங்கை மருத்துவர் சங்கத்தின் செயலாளர் எச்சரித்துள்ளார்.

 

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சுமார் 25 லட்சம் பேர் வரையில் மாதம் தோறும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

 

இதில் நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மருந்துகளை பெற முடியாமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் குழந்தைகள் இருப்பதாகவும், இவர்களுக்கான சுகாதார  சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், மாதம் தோறும் மருத்துவ   தேவைகளுக்காக ஏராளமான குழந்தைகள் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் மருந்து பொருட்களின் கையிருப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில் ,தற்போது இருதய அறுவை சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவப் பொருட்களும் இல்லை என  அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

இலங்கைக்கு தேவையான   மருந்து பொருட்களை வழங்கி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் அவற்றை உரிய மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது .எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ,நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. அதேபோல் தேவையான மருத்துவப் பொருட்களை  ,வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் போதிய வசதிகளின்றி தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.