ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தற்போது அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சியின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நேடா முகமது நதீம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அதிருப்தி:
ஆப்கானிஸ்தானில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் உலக நாடுகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். பெண்களின் கல்விக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பிற்போக்குத் தனமான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வித்துறை செய்தி தொடர்பாளர் ஜியால்லா ஹாஷிமியும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கண்டனத்தில், “ தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் வரை சர்வதேச சமூகத்தில் சட்டப்பூர்வமான உறுப்பினராக இருக்க எதிர்பார்க்க முடியாது. இந்த முடிவு தலிபான்களுக்கு பின்விளைவுகளுடன் வரும்” இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் கல்வி நிறுவனங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. வகுப்புகளில் கடும் ஆண் – பெண் பாரபட்சம் கடுமையாக காட்டப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெண் பேராசிரியைகள் அல்லது வயதான பேராசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பெரும்பாலான பதின்ம வயது பெண்களுக்கான பள்ளிக்கல்வி தடை செய்யப்பட்டுள்ளது.
கனவு கலைந்தது:
ஆப்கானிஸ்தான் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவிற்கு ஐ.நா. மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.வின் ஆப்கானிஸ்தானுக்கான தலைமை துணைசிறப்பு பிரதிநிதி பதிவிட்டுள்ள ட்விட்டரில், கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. பெண்களுக்கான கல்விக்கான கதவை அடைப்பதன் மூலம் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கான கதவு அடைக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசின் இந்த உத்தரவால் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான பெண்களின் கனவு சிதைந்துள்ளது.
மேலும் படிக்க: Elon Musk: "முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவேன் " - எலான்மஸ்க் அதிரடி அறிவிப்பு..!
மேலும் படிக்க: Nazi Camp: 10,500 பேரை கொன்ற பெண்ணுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை.. காரணம் என்ன?