நாசிக்கள் வதை முகாம்:


ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடைபெற்றபோது தொடங்கிய இரண்டாம் உலகப்போரின் போது,  அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக நாசி கைதிகளுக்கான சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூடங்களாக செயல்பட்டன. குறிப்பாக இந்த சிறைச்சாலையில் சுமார் 30 லட்சம் யூதர்கள் நச்சு வாயு செலுத்தியும், துப்பாக்கிச்சூட்டினாலும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கைதிகள் இடநெருக்கடியின் காரணமாக ரயில்கள் மூலம் மாற்றப்பட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். இரயில்களிலேயே பல நாள் உணவு தண்ணீரின்றி தங்கவைக்கப்பட்டனர். பலர் இதன் காரணமாக நீரழிவு நோய், கடுமையான கோடை வெப்பத்தினால் வயிற்றுப்போக்கு, பனிக்கால கடுங்குளிரினால் உறைந்து போதல், போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு மோசமான மரணத்தை சந்தித்தனர்.


10,500 பேரின் மரணத்திற்கு காரணமான பெண்:


நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் பலியானது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இன்றளவும் ஜெர்மனியில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாஜி வதைக்கூடத்தில் 10, 500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 






நாஜி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் விசாரணைக்கு ஆஜராகமல் தவிர்த்து வந்த அந்த மூதாட்டியை, போலீசார் பிடித்து நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு ஆஜர்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் இறுதி விசாரணையில், இம்கார்டு பர்ச்னர்  10, 500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை வழங்கி, இட்ஸேஹோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தபோது  இம்கார்டு பர்ச்னருக்கு வெறும் வயது 18 வயது என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பரப்புரையில் சிக்கிய யூதர்களே பெரும்பாலானோர் என கூறப்படுகிறது.