கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஒடுக்கப்படும் பெண்கள்:
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு பெண்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்தது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு கட்டுபாடு விதித்தது, கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தது, அழகு நிலையங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதித்தது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் தலிபான் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான தேசிய பூங்காக்களில் ஒன்றான பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காவுக்கு செல்ல தடை:
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவிற்கு வருகை தருகின்றனர். தேசிய பூங்காவில் உள்ள சபையர்-நீல ஏரியும் உயரமான பாறைகளும்தான் மக்களை அங்கு கவர்ந்திழுக்கிறது. நிலைமை இப்படியிருக்க, அங்கு வரும் பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிவதில்லை என நல்லொழுக்கத்துறை அமைச்சர் புகார் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து நல்லொழுக்கத்துறை அமைச்சர் முகமது காலித் ஹனாபி கூறுகையில், "சுற்றுலா செல்வது பெண்களுக்கு அவசியமில்லை. பெண்கள் பூங்காவிற்குள் நுழைவதைத் தடுக்குமாறு பாதுகாப்புப் படையினரைக் கேட்டு கொள்கிறேன்" என்றார்.
இதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான Human Rights Watch கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த ஹீதர் பார் கூறுகையில், "அடுத்ததாக தலிபான்கள் எங்களை சுவாசிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். பெண்கள் வெளியே செல்வதை தடுக்க முயற்சிப்பது, இயற்கையை ரசிப்பதை தடுப்பது போன்றவை மிகைப்படுத்தலாகத் தெரிகிறது" என்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு, அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் ஆட்சியின்போது, இதே பூங்காவில் நான்கு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வனப்பாதுகாப்பு அதிகாரியாக பெண்கள் நியமிக்கப்படுவது ஆப்கானிஸ்தான் வரலாற்றில் அதுவே முதல்முறை. தற்போது. தலிபான் ஆட்சியில் பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.