ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தப் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படாது என அந்நாட்டில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான் அரசு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமீரக நாடுகளில் கடந்த செப்டம்பர் 19 அன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் மொமாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் போட்டிகளில் இஸ்லாமிய விரோத உள்ளடக்கம் இருப்பதாகவும், பெண்கள் நடனம் ஆடுவது, பார்வையாளர்களுக்கான இடத்தில் பெண்கள் பங்கேற்பது முதலானவை இருப்பதால், தாலிபான்களின் கொள்கைகளின்படி, ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு செய்தியாளர்களும் அந்நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பல கோடி மதிப்புள்ள பணம் செலவு செய்து வாங்கியுள்ள தொலைக்காட்சி சேனல்கள், தற்போது தாலிபான்கள் விதித்துள்ள தடையின் காரணமாக, மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம், ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள விளையாட்டுத் துறையின் தலைவர் பஷிர் அகமது ருஸ்மத்சாய் தாலிபான்களின் ஆட்சியில் சுமார் 400 விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், எனினும் பெண்களின் பங்கேற்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் பதிலளிக்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. `பெண்கள் குறித்து மேலும் கேள்விகளைக் கேட்க வேண்டாம்’ என்று அவர் AFP என்ற செய்தி நிறுவனத்திடம் கூறியதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
1996 முதல் 2001 வரையிலான தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதமான அடக்குமுறைகள் அமலில் இருந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதோடு, ஆண்கள் விளையாடுவதும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், கல்வி, வேலைவாய்ப்பு முதலானவற்றில் இருந்து பெண்கள் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா ஆதரவு பெற்ற ஆப்கான் அரசு தாலிபான்களால் முழுமையாக வீழ்த்தப்பட்ட போது, கடந்த கால தாலிபான் ஆட்சியில் நிகழ்ந்த ஒடுக்குமுறைகள் மீண்டும் நிகழலாம் என ஆப்கானிஸ்தானில் பெண்களும், பெண் உரிமைக்கான அமைப்புகளும் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.