தென்னாப்ரிக்காவில் தேனீக்கள் தாக்கியதில் 63 பென்குயின்கள் பரிதாபமாக இறந்தன. உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக பென்குயின்கள் இருக்கும் சூழலில், ஒரே நிகழ்வில் 63 பென்குயின்கள் உயிரிழந்துள்ளது உயிரி ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன.


இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் பகுதியில் அரிய வகையான அழிந்து வரும் இனமான பென்குயின்கள் தேனீக்கள் தாக்கியதால் உயிரிழந்துள்ளன. மொத்தம் 63 பென்குயின்கள், தேனீக்கள் தாக்கியத்தில் உயிரிழந்தன. இதனை தென் ஆப்ரிக்காவின் கடலோரப் பறவைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.


இது குறித்து தென் ஆப்ரிக்காவின் கடலோரப் பறவைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மருத்துவர் டேவிட் ராபர்ட்ஸ் கூறுகையில், "இறந்து கிடந்த பென்குயின்களை நாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அப்போது, அவற்றின் உடலில் தேனீக்கள் தாக்கியதற்கான அடையாளங்கள் இருப்பதை அறிந்தோம். இது மிகவும் அரிதான நிகழ்வு. இது ஏதோ எதார்த்தமாக நடந்த செயலாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சம்பவ இடத்தில் தேனீக்களும் இறந்து கிடந்தன. இறந்த பென்குயின்கள் கேப் டவுன் அருகே உள்ள சைமன்ஸ்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்தவை. இங்கே தேனீக்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


ஏற்கெனவே, பென்குயின்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால். அவை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளில் பென்குயின்கள் கொத்து கொத்தாக உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது " என்று தெரிவித்துள்ளார்.




கண்களைக் குறிவைத்து தாக்கிய தேனீக்கள்..


இறந்துபோன 63 பென்குயின்களும் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது சொல்லி வைத்தாற்போல் அனைத்து பென்குயின் பறவைகளுமே கண்களின் கடிவாங்கியிருந்தன. தேனீக்கள் ஏன் பென்குயின்களைத் தாக்கின. அதுவும் ஏன் குறிப்பாக கண்களைக் குறிவைத்து தாக்கின என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் புதிராக இருக்கிறது. கேப் டவுன் பூங்காவில் பாதுகாக்கப்படும் கேப் பீஸ் எனப்படும் பென்குயின்களைத் தாக்கிய இந்த குறிப்பிட்ட வகை தேனீக்களையும் ஆய்வு செய்யவிருப்பதாக தென் ஆப்பிரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு உலகளவில் வெறும் 42000 பென்குயின்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் ஆர்ட்டிக், அன்டார்டிக் பகுதியில் உள்ள பென்குயின்கள், துருவக் கரடிகள், சீல் எனப்படும் நீர்நாய்கள் ஆகியன ஆபத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.