சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், ‘வன்கொடுமை 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்தது’ என்று கூறி, குற்றவாளியின் தண்டனையை நீதிமன்றம் குறைத்திருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாசெல் என்ற மாநிலத்தில் 33 வயது பெண் ஒருவர், இரு ஆண்களால் தனது வீட்டின் முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை, சுவிட்சர்லாந்து நாட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை அணுகிய விதமும், குற்றவாளிகள் மீதான கரிசனமும் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
குற்றவாளிகளுள் ஒருவர் சிறார் என்பதால், அவரை சிறார் சிறைக்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது பாசெல் மாநில நீதிமன்றம். மற்றொரு குற்றவாளியான 32 வயது ஆணுக்கு அவரது தண்டனைக் காலம் 51 மாதங்கள் என்பதில் இருந்து 36 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு மூலம் இதனைப் பெற்றுள்ள அவர், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் விடுதலை செய்யப்படுவார்.
இந்தக் குற்றவாளியின் தண்டனையைக் குறைத்த போது, பாசெல் நீதிமன்றத்தின் நீதிபதி லிசோலெட் ஹென்ஸ் ஸ்விஸ் குற்றவியல் சட்டத்தின்படி குற்றவாளியின் மிதமான அளவிலேயே குற்றம் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் அவர், வன்கொடுமைச் சம்பவம் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், அது மிகக் குறைவான நேரம் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிரந்தர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ஸ்விஸ் ஊடகங்கள், இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டும் விதமாக அமைந்திருப்பதாக விமர்சித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் தன்னை வன்கொடுமை செய்தவர்களைத் தூண்டியதாகவும், அவர்கள் சந்தித்துக் கொண்ட க்ளப்பில் அவர்களைக் கவர்வது போல நடந்துகொண்டதாகவும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நெருப்புடன் விளையாடியதால், அவருக்கு இப்படியான விபரீதம் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளது இந்தத் தீர்ப்பு.
குற்றவாளிகள் இருவரும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், தண்டனைக் கால முடிவடைந்ததும் அங்கு நாடுகடத்தப்படுவர் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த தீர்ப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 அன்று, சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ‘வன்கொடுமை என்பதில் குறைவான நேரம், அதிகமான நேரம் என்பது கிடையாது’ என்று போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டுள்ளனர்.
பாசெல் நீதிமன்றத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு நகல் வெளியிடப்பட்ட பிறகு, சுவிட்சர்லாந்து கூட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு செய்யப்போவதாக அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.