பெருந்தொற்று காலத்தில் அன்பை வெளிப்படுத்த புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது ஜப்பான் நாடு. ஜப்பானியர்கள் குடும்ப உறவுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பவர்கள் என்பது உலகறிந்தது. அதேபோல், ஆரோக்கியமான வாழ்வியல் முறையால் ஜப்பானில் மக்கள் நீண்ட வயது வரை வாழ்கின்றனர் என்பதும் தெரிந்த தகவலே.


வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க அதுவும் பெருந்தொற்று காலத்தில் இறுக்கங்களைத் தவிர்த்து இன்பம் காண ஜப்பானில் தற்போது புதிய நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்படுகிறது.


பேபி ரைஸ் பேக்ஸ்..


ஜப்பானில் புதிதாகப் பிறக்கும் குழந்தையை குடும்பமே சேர்ந்து கொண்டாடும் பாங்கு மிகவும் அழகானது. அத்தனை பேரும் சேர்ந்து குழந்தையை வரவேற்று குடும்பமாகக் கூடி பல்வேறு சடங்குகளைச் செய்து மகிழ்ந்திருப்பர். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் அந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இதனால், புதிதாக பிறக்கும் குழந்தையை சொந்த பந்தங்களிடம் காட்ட இயலாமல் புதிய பெற்றோரும் மனமுடைந்தனர். அப்போதுதான் முளைத்தது ஒரு புதிய பழக்கம். தம்பதியர் தங்களின் குழந்தையின் எடையளவில் ஒரு அரிசிப் பையை ஏற்பாடு செய்கின்றன. அந்த அரிசிப் பையை விதவிதமாக அலங்காரமும் செய்கின்றனர். சிலர் அதை சிறிய போர்வையில் சுற்றி பார்ப்பதற்கு குழந்தை போலவே உருவாக்குகின்றனர்.




அந்த அரிசிப் பையை, அவர்கள் தங்களின் உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர். குழந்தையை நேரில் வந்து கொஞ்ச முடியாதவர்கள். கிடைக்கப்பெற்ற அரிசிப் பையைக் குழந்தையாகப் பாவித்து கொஞ்சி வாழ்த்துகின்றனர். அந்த வாழ்த்து குழந்தைக்கு சென்று சேரும் என நம்பப்படுகிறது. வயதானோர் அந்த அரிசிப் பையை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் மகிழ்ச்சியைக் கடத்தி, பரப்பி பெருந்தொற்று காலத்திலும் பேரின்பம் காண்கின்றனர் ஜப்பானிய மக்கள்.


களைகட்டும் புதிய தொழில்:


இந்த அரிசிப் பைகளைத் தயாரிக்க புதுப்புது நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பையின் விலையும் எடையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 3.5 கிலோ எடை கொண்ட ஒரு பையின் விலை ஜப்பானிய மதிப்பில் 3,500 யென் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


பெரும்பாலும் அரிசிக் கடைகளே இதை சைட் பிசினஸாக ஆரம்பித்துள்ளன. கோமே நொ ஜோடோ ஹோஷிமியா என்ற கடையின் உரிமையாளர் நாருவோ ஓனோ கூறுகையில், "14 வருடங்களுக்கு முன் எனக்கு மகன் பிறந்தார். அப்போது எனது மகிழ்ச்சியை தூரப்பிரதேசங்களில் வாழும் எனது உறவினர்களுடன் பகிர விரும்பினேன். அப்போது நான், எனது மகன் எடை கொண்ட அரிசிப் பையை அலங்கரித்து அதனை எனது உறவினர்களுக்கு அனுப்பிவைத்து மகன் பிறந்த தகவலைக் கூறினேன். இதேபோல், திருமண நிகழ்வின் போது மணமனும், மணமகளும் தங்களின் பெற்றோருக்கு தங்களின் சிறு வயது புகைப்படம் அச்சிடப்பட்ட அரிசிப் பையை பரிசாகக் கொடுத்து தங்களுக்குப் பேறு தந்தமைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு பரிசுப் பையை உருவாக்கினேன். இப்போது பெருந்தொற்று காலத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் நான் செய்த அரிசிப் பை அன்பளிப்பை உயிர்ப்பித்துள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது" என்றார். 


இந்த அரிசிப்பை அன்பளிப்புத் தொழிலில் ஜோடோ ஹோஷிமியா கடைதான் முன்னோடி. ஆனால், தற்போது இதே கான்செப்டைக் கொண்டு நிறைய கடைகளும் வந்துவிட்டன.