Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தங்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கையை, 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க நாசா பரிசீலித்து வருகிறது.


சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:


இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) போயிங் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஜூன் 5ம் தேதியன்று ஃப்ளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கேப் கனாவரல் விண்வெளிப் படை நிலையத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர். நாசாவிடம் இருந்து போயிங் நிறுவனம் தொடர்ந்து விண்வெளி பயணங்களை மேற்கொள்வதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான, இறுதி சோதனையாக இது கருதப்பட்டது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர், ஜூன் 14-ம் தேதியே நாடு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விண்கலத்தில் கண்டறியப்பட்ட கோளாறுகளால் அவர்களால் தற்போது வரை பூமிக்கு திரும்பவில்லை.


இஸ்ரோ தலைவர் சொல்வது என்ன?


விண்வெளி வீரர்கள் தாமதமாகத் திரும்புவது குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தக் கூடாது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.சோமநாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், “ ஒரு இடத்தில் சிக்கித் தவிப்பது அல்லது சிக்கிக் கொள்வது என்பது இந்த நேரத்தில் நாம் வைத்திருக்க வேண்டிய சூழல் அல்ல. அங்கு ஒன்பது விண்வெளி வீரர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலையில் இல்லை. போயிங் ஸ்டார்லைனர் விண்வெளிக்கு பாதுகாப்பாக பயணிக்கும் திறனை உறுதி செய்வதற்காக சோதனை செய்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. விண்வெளி வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் போதுமான திறன்களைக் கொண்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு ISS ஒரு பாதுகாப்பான இடம்.  ஸ்டார்லைனர் போன்ற ஒரு விண்கலம் உருவாகும்போது, ​​அது விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்புவது தொடர்பான பயணங்களில் நம்பகத்தன்மையுடன் செயல்படுமா என்பதுதான் இன்றைய மிகப்பெரிய கேள்வியாக இருக்க வேண்டும் என்றும், இதைத்தான் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆலோசிக்கிறார்கள்” என்றும் சோமநாத் தெரிவித்துள்ளார்.


சுனிதா வில்லியம்ஸின் தங்கும் காலம் நீட்டிப்பு:


இதற்கிடையில், நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் பேசுகையில்,  ஸ்டார்லைனர் குழுவினரின் பணிக் காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க நாசா பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளார்.


ஸ்டார்லைனர் விண்கலத்தில் பிரச்னை என்ன?


ஆக்சிடிசர்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படும் விண்கல வால்வில் உள்ள சிக்கல்களால் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸிடைசர்கள் என்பது ராக்கெட்டுகளை உயர்த்தும் போது உதவுகிறது மற்றும் எரிப்புக்கு உதவுவதன் மூலம் ராக்கெட்டின் பாதையை மாற்றுகிறது. அதில் உள்ள கோளாறுகளால், ஏவப்படுவதற்கு முன்பு வால்விலிருந்து சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. ஹீலியம் வாயு கசிவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ராக்கெட்டுகளை உந்தி தள்ளுவதற்கும், அவற்றின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை ஒருங்கிணைப்பதற்கும், விண்கலத்தை இயக்குவதற்கும் ஹீலியம் முக்கியமானது.  ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பிரச்னையை சரிசெய்ய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.


கூடுதல் நாட்கள் தங்கலாமா?


விண்கலம் 45 நாட்கள் வரை நிறுத்தப்பட்டிருக்கும். அதையும் தாண்டி, ISSல் பல மாதங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பதால், இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் உடனடி ஆபத்து எதுவும் இல்லை. பாதுகாப்புக் கவலைகள் இருந்தால், விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு வர வேண்டியிருக்கும், இது தற்போது ISS உடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.