இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக விண்வெளி வீரர் வீரர் புட்ச் வில்மோர் உடன் சேர்ந்து பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
சுனிதாவின் சர்வதேச விண்வெளி பயணம்:
கடந்த ஜூன் 7ம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு வார கால ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது .
ஜூன் 26-ம் தேதி பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்த பயணமானது, விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்பான ஆய்வு தொடர்வதால், பூமிக்கு திரும்புவதற்கான சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கசிவு கோளாறு:
இருவரையும் ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், தனது முதல் விண்வெளி பயணத்தை, வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், பயணத்தின் புறப்பாட்டின் போதே எரிபொருளான ஹீலியம் கசிவுகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உந்தி தள்ளும் த்ரெஷ்டர் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் இருந்ததாகவும் தகவல் வெளியானது ”அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரச்னை இருந்தபோதும், எப்படி பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் திரும்பும் சூழ்நிலையில், விண்கலத்தை சரிசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரோ தலைவர் கருத்து:
இந்நிலையில், இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவிக்கையில், ஐஎஸ்எஸ் பாதுகாப்பான இடம் அங்கு ஒன்பது விண்வெளி வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலையில் இல்லை.
சோம்நாத் மேலும் கூறுகையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளிக்கு பாதுகாப்பாக பயணிக்கும் திறனை உறுதி செய்வதற்காக சோதனை செய்வதை கவனம் செலுத்துகிறது. விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கு, போதுமான திறன்கள் உள்ளன, மேலும் விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு ISS ஒரு பாதுகாப்பான இடம் என்றும் தெரிவித்தார்.
”பிரச்னை ஏற்பட்டால்?”
இதற்கிடையில், நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளரான ஸ்டீவ் ஸ்டிச் தெரிவித்ததாக சி.என்.என் செய்தியின் அறிக்கையின்படி, ஸ்டார்லைனரின் பணியை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க நாசா பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். ISSல் பல மாதங்கள் நீடிக்கும் பொருட்கள் இருப்பதால், இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் உடனடி ஆபத்து எதுவும் இல்லை.
ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருந்தால், விண்வெளி வீரர்கள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு வர ஏற்பாடு செய்யப்படும். இது தற்போது ISS உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.