சூடானில் நிலவும் போர் 24 மணி நேரம் நிறுத்தப்பட்ட நிலையிலும் இந்தியர்கள் கர்தூம் நகரை விட்டு வெளியேற முடியாம் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  


சூடான் நாட்டில் மோதலில் ஈடுபட்டுள்ள ராணுவமும்,  துணை ராணுவப் படையும் செவ்வாய் மாலை முதல் 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர். தலைநகர் கார்ட்டூமில் ராஜதந்திர தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இருதரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. மாலை 6 மணிக்கு தொடங்கும் போர் நிறுத்தம் 24 மணி நேரத்திற்கு பின் நீடிக்கப்படாது என்று சூடானில் ஆளும் ராணுவக் குழுவின் உறுப்பினரான ராணுவ ஜெனரல் ஷம்ச் ஏல் டின் கபாஷி  தெரிவித்தார்.


தாக்குதல் நடக்கும் இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி சென்றனர். இந்தியர்கள் உள்ளிட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் திணறினர். இந்தியர்கள் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தாங்கள் தவிப்பதாகவும், தாங்கள் தங்கியுள்ள கர்தூம் நகரில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


சூடான் மோதலுக்கு காரணம் 


20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. அதற்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்ற சர்ச்சை நிலவி வந்தது. 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் அங்கே பெருமளவில் உள்நாட்டுக் கிளர்ச்சி வெடித்தது. 1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.


1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷாரியா சட்டத்தை திணிக்க முயன்றது. கிறிஸ்துவர்களும், அனிமிஸ்ட்ஸ்  மதத்தவரும் அதிகம் இருந்த தெற்கு சூடானில் இந்தத் திணிப்பு கிளிர்ச்சியாக வெடித்தது. பின்னர் 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.


அப்போது அரசியல் ரீதியாகவும், மதம் மற்றும் ராணுவம் ரீதியாகவும் பலம் வாய்ந்தவராக இருந்த ஒமர் அல் பஷீர் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி ராணுவத் தளபதியாகவும், பிரதமராகவும் பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், 1996-க்குப் பின்னர் அல் பஷீர் தொடர்ந்து தன்னை அதிபராக நிலைநிறுத்திக் கொண்டார். 1996-க்குப் பின்னர் அங்கு தேர்தலே நடைபெறவில்லை. 2019-ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டம் வெடித்ததால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.


கடந்த 2003-ஆம் ஆண்டில் வெடித்த கலவரங்களுக்குப் பின்னர் சூடானில் இதுவரை 40 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததுடன், 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன அழிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில்,  அங்கு வாழுயும் மக்கள் உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்டவை இல்லாமல் அவதிப்பட்டு  வருகின்றனர். 


சூடானில் விவசாய நிலம்,  தங்கச் சுரங்கங்கள், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளன.  சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73% எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்  இருப்பதற்கு அங்கே நிலையான ஆட்சி இல்லாதது தான் காரணம். ஜனநாயக அரசு இல்லாததால், சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பது குறிப்பித்தக்கது.