சூடானைக் கைப்பற்ற அந்நாட்டின் ராணுவத்தின் ஒரு பகுதியினரும், சில கிளர்ச்சியாளர்களும் பல முறை முயன்றுவந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் அப்தல்லா ஹாம்டாக் வீட்டுச் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சர்ச்சைகளின் கூடாரம் சூடான்..


சூடான் பேருக்கு ஏற்ற மாதிரி பல்வேறு சர்ச்சைகளால் சூடான நாடாகத் தான் இருக்கிறது. ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள சூடான் இக்கண்டத்திலேயே மிகப்பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர்.


சூடானின் நீண்ட கால பிரதமராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரித்தில் இருந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். அவரது ஆட்சி உள்நாட்டு கிளர்ச்சிகளால் நிரம்பியது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக கடந்த  2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.  


போர் குற்றங்களை செய்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பஷீர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியபோதிலும் 2010, 2015 தேர்தல்களில் ஒமர் சூடானில் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.




அப்தல்லா ஹாம்டாக்


அதன் பின்னர் அவரது ஆட்சியின் மீது மக்களுக்கு சலிப்பும் வெறுப்பும் வந்தது. மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட கூடவே ராணுவமும் கைகோர்த்துக் கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீர் பதிவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பிரதமர் பதவி பறிபோன பின்னர் எப்படியாவது மீண்டும் ஆட்சியில் அமர தொடர்ந்து பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது ரஷ்யா சென்று அங்கு அதிபர் புதினை சந்தித்து ஏதாவது மத்தியஸ்தம் செய்ய முடியுமா என்று நூல்விட்டுப் பார்ப்பார். கடந்த செப்டம்பர் மாதம் கூட அந்நாட்டு நாடாளுமன்றம் நோக்கி சென்ற ராணுவக் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒமர் அல் பஷீர் தான் தூண்டிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் இடைக்கால அரசை அமைத்த அப்தல்லா ஹாம்டாக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
இன்று திங்கள் அதிகாலை பிரதமர் மாளிகைக்குள் நுழைந்த ராணுவத்தினர் சிலர் அப்தல்லா ஹாம்டாக்கை கைது செய்ததாகக் கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது.


மேலும் 4 அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சூடான் ஜனநாயக அரசை ராணுவம் கைப்பற்றியது என்ற நிலையை அறிந்து கவலை கொண்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.