இலங்கை நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர் கோத்தபய ராஜபக்சே. இந்தாண்டு தொடக்கம் முதல் அந்த நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கொதித்தெழுந்தனர். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்தினருடன் நாட்டை விட்டு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி தப்பியோடினார்.


இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கைக்கு கோத்தபய ராஜபக்சே திரும்பினார். இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்றிருந்தார். இலங்கை சென்றிருந்த சுப்பிரமணிய சுவாமி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்பிய பிறகு அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த சந்திப்பின்போது, இவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலவரம், பொருளாதார சூழல், ராஜபக்சே குடும்ப அரசியல் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தது மட்டுமின்றி, அவரது சகோதரரும், முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவையும் சுப்பிரமணியசுவுாமி சந்தித்துள்ளார். மகிந்த ராஜபக்சே வீட்டில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி பூஜையில் சுப்பிரிமணிய சுவாமி பங்கேற்றார் என்றும் தகவல்கள் வெளியாகியது.


இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவுடன் சென்ற சுப்பிரமணிய சுவாமி இலங்கையின் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனாவையும் கொழும்புவில் சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக, இலங்கையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு சென்றார். அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, தாய்லாந்து தப்பிச்சென்றார். இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில்தான் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்.


இலங்கையின் கொழும்பு நகரில் தற்போது வசித்து வரும் ராஜபக்சேவிற்கு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சுப்பிரமணிய சுவாமிக்கும், ராஜபக்சே சகோதரர்களுக்கும் இடையே நீண்டகால நட்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.