தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். 


இயற்கை பேரிடர்களில் மிகவும் அபாயகரமானதாக நிலநடுக்கம் கருதப்படுகிறது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும்போது மேற்பரப்பு தட்டுகள் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று உராசுவதால் நிலநடுக்கமானது ஏற்படுகிறது. இது ஆழ்கடலில் நிகழும் போதும் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. கண நேரத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் நிலநடுக்கம் என்றாலே அனைவரும் பதற்றமடைந்து விடுகின்றனர். 






இந்நிலையில் தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


பூமிக்கடியில் 35 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைவான் நாட்டின் பல பகுதிகளிலும் மின் இணைப்பானது துண்டிக்கப்பட்டது. கிழக்கு நகரமான ஹூவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடி வந்தனர். தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 






நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரயில்கள் குலுங்கியபடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சில இடங்களில் கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளது. இதில் எவ்வித சேதம் ஏற்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முழுவீச்சில் தைவான் நாட்டின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 25 ஆண்டுகளில் தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 1999 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுமார் 2,400 மக்கள் உயிரிழந்தனர். தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 3 மீட்டர் உயரத்துக்கு கடலில் அலைகள் எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.