கொரோனா வைரஸ் ஏற்கெனவே ஆல்ஃபா, பீட்டா, காமா, கப்பா, டெல்டா, டெல்டா பிளஸ், லாம்ப்டா என பல்வேறு விதமாக உருமாறிவிட்ட நிலையில், இன்னும் பல மோசமான ஆபத்தான வகையில் உருமாற வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால குழு எச்சரித்துள்ளது.
நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) அவசரகால குழுவின் 8வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக, அதன் உருமாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது குழுவினர் தாங்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகளவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவ வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால குழு கூறுகையில், ”கொரோனா அச்சுறுத்தல் இன்னும் விலகவில்லை. கொரோனா இன்னமும் சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாகவே இருக்கிறது” என்று கூறியது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துங்கள். உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், "செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து உலக நாடுகளும் 10% மக்களுக்காவது தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உலக சுகாதாரத்தை பாதுகாக்க தடுப்பூசித் திட்டத்தை வேகமாக செயல்படுத்துவது அவசியம். உலக நாடுகள் இதே மாதிரி சுணக்கம் காட்டினால் மீண்டும் மீண்டும் கொரோனா கலந்த எதிர்காலத்தை நோக்கித் தான் நாம் பயணப்படுவோம்.
அதேபோல் உலக நாடுகள் தொற்றுகளைக் கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல், அதனை கட்டுப்படுத்துதல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு கூட்டு முயற்சியாக கொரோனாவை ஒழிக்க வேண்டும்" என்றார்.
மூன்றாவது அலையின் தொடக்கம்..
முன்னதாக கொரோனா பரவல் பற்றி கருத்து தெரிவித்திருந்த அவர், "துரதிர்ஷ்டவசமாக நாம் கொரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. தற்போது உலகில் 111 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
டெல்டாவே காரணம்:
டெல்டா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக அங்கு கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது. ஜூன் மாதம் 23-ம் தேதி 11,300 ஆக இருந்த கொரோனா தொற்று தற்போது 23,600 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா பலி எண்ணிக்கை தினசரி 200-ஐ தாண்டுகிறது. ஆப்ரிக்கா, ரஷ்யா என பல இடங்களிலும் கொரோனா வேகமெடுக்க டெல்டா வைரஸே காரணமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.