கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் அண்மைக் காலமாக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை கியூபத் தலைநகர் ஹவானாவில் மக்கள் பெருமளவில் திரண்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பித் திரண்டனர். போராட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்தார். 163 பேர் கைது செய்யப்பட்டனர். ஏன் இந்தப் போராட்டம், எதற்கு இத்தனைக் கொந்தளிப்பு?


கியூப மக்களின் போராட்டத்துக்கு மூன்று விஷயங்கள் முக்கியக் காரணியாகக் கூறப்படுகிறது.


1. கொரோனா வைரஸ்


கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி மக்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள அரசு எடுத்த நடவடிக்கைகளும் சர்வாதிகாரப் போக்குடையதாக இருக்கிறது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சமீபகாலமாக கியூபாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஒரே நாளில் 6750 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்தனர். ஆனால், அரசு கூறும் இந்தப் புள்ளிவிவரம் மிகமிகக் குறைவு, உண்மையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உரிய சிகிச்சை கூட கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் இருப்பதாக மக்கள் குமுறுகின்றனர். இதனால் அண்மையில் #SOSCuba என்ற ஹேஹ்டேகை உருவாக்கிய மக்கள் தங்களுக்கு உதவி கோரி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிரத் தொடங்கியுள்ளனர். ஆனால், கியூபா அதிபர் மிகுவெல் டியாஸ் கேனல், நாட்டில் கொரோனா மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கட்டுக்குள் உள்ளதாகவும், சொந்தமாக கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளதாகவும் கூறுகிறார். கியூபாவில் இதுவரை மிகமிகக் குறைந்த அளவிலான மக்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.




2. பொருளாதார நிலவரம்


கியூபாவின் பொருளாதாரத்துக்கு சுற்றுலா பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால், கொரோனா பரவலையடுத்து உலகமே பொதுமுடக்க வளையத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் தீவு நாடான கியூபாவில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அரசாங்கம் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்தது. மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் கொண்டு வந்தது. ஆனால், மோசமான பக்கவிளைவாக விலைவாசி உயர்வு ஏற்பட்டது. கியூபாவின் பொருளாதார நிபுணர் பாவேல் விடால், அடுத்த சில மாதங்களில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை 500% முதல் 600% வரை அதிகரிக்கும் எனக் கணித்துள்ளார். கடந்த ஆண்டு கியூப அரசு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துகளை வாங்கிக்கொள்ள கடைகளை திறந்தது. வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அங்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்களுக்கு பூசணிக்காயால் செய்யப்பட்ட பிரெட் வழங்கப்பட்டது. கடந்த மாதம், வெளிநாட்டு டாலர்கள் ஏற்கப்படாது என்று கியூப அரசு அறிவித்தது. மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதும் போராட்டத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


3. இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்


ரவுல் காஸ்ட்ரோ அதிபராக இருந்தபோது கியூபாவில் இணையப் புரட்சி ஏற்பட்டது. அதன்பின்னர் கியூப மக்களுக்கு இணையம் சுதந்திரமாகக் கிட்டியது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்துத் தலங்களையும் கியூப மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடந்த போராட்டமும் சமூகவலைதளங்கள் வாயிலாகத்தான் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கியூப அரசாங்கமோ சமூகவிரோதிகள் சிலர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகிறது எனத் தெரிவித்துள்ளது.




போராட்டத்துக்குக் கிடைத்த பலன்:


இந்நிலையில் நேற்று கியூப அரசாங்கம் மக்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரக் கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் இறங்கிப் போராடிய மக்கள் வைத்த கோரிக்கையில் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது. இது குறித்து அதிபர் மிகுவெல் தொலைக்காட்சியில் பேசும்போது, மக்கள் இதைத்தான் கேட்டனர். வெளிநாட்டு பயணிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். அதனால் இந்த முடிவை எடுப்பது அவசியமாகியிருக்கிறது.