பிரேசிலில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலை பலத்த சூறாவளி காற்று காரணமாக இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை.
பிரேசிலின் ரியோ கிராண்டே சுல் பெரு நகர பகுதியின் ஒருபகுதியாக போர்டோ அலெக்ரே என்ற பகுதி உள்ளது. அங்குள்ள குவைபாவில் ஒரு மெகா ஸ்டோருக்கு வெளிப்பகுதியில் 24 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சுதந்திர தேவி சிலை உள்ளது. கார் பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த சிலையானது பலத்த காற்று காரணமாக சாய்ந்து இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பல வாகனங்கள் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்தது.
முதலில் சிலை விழுந்த வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகவே பலரும் நினைத்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில் அது உண்மை தான் என பலரும் அதிர்ச்சி தெரிவித்தனர். இவ்வளவு உறுதியான சிலை எப்படி காற்றில் விழுந்திருக்கும் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆனால் பிரேசில் நாட்டின் அமலில் உள்ள தொழில்நுட்ப தர நிலைகளை கருத்தில் கொண்டு தான் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக அந்த ஷாப்பிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலை அசையத் தொடங்கியதும் உடனடியாக அந்த நிறுவனம் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. சிலை உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வானிலை தவிர்த்து வேறு எதாவது காரணம் உள்ளதாக என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் சிலை அமைக்கப்பட்ட இடத்தை மதிப்பீடவும் ஆய்வு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், பெருநகரப் பகுதிக்கு முன்னதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்பகுதியில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக குளிர் காற்று காரணமாக வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், டிசம்பர் 17ம் தேதி முதல் அங்கு நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிலையானது 2020ம் ஆண்டு நிறுவப்பட்டது. 11 மீட்டர் அடி உயர அடித்தளத்தில் நிறுவப்பட்ட இந்த நிலை சுமார் 114 அடி உயரம் கொண்டது. ஆனால் மேல் பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.