ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன்.
இழுபறியில் இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்
உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும், பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியில் தான் உள்ளன.
சமீபத்தில் 28 அம்ச அமைதித் திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்த நிலையில், அதை ரஷ்யா ஏற்றது. ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவிற்கே சாதகமாக இருப்பதாகக் கூறி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதில் மாற்றங்களை கோரினார்.
இதையடுத்து, திருத்தப்பட்ட முன்மொழிவு வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. திருத்தப்பட்ட அம்சங்களை உக்ரைன் பிரதிநிதிகள் ஏற்றதாகவும், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தான் முட்டுக்கட்டையாக இருப்பதகாவும், ட்ரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாகத் தான் இருந்தது. அது தான் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில கூட்டாளிகள், இந்த முடிவை ஏற்கவில்லை. உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள், ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க முடியும்.“ என்று கூறினார்.
மேலும், “அமைதியையும், ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்ற உறுதியான உத்தரவாதங்களையும் தான் உக்ரைன் விரும்புகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது. ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது.“ என்று ஜெலன்ஸ்கி உறுதிபடக் கூறினார்.
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்த உக்ரைனின் நீர்மூழ்கி ட்ரோன்
இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல், நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது. அங்கு ரஷ்யா பல கடற்படைக் கப்பல்களை உக்ரேனிய தாக்குதல்களிலிருந்து விலக்கி வைக்க மறுசீரமைத்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது. துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நடைமுறையில் கடற்படைக் கப்பற்படை இல்லாத உக்ரைன், ரஷ்யாவின் பெரிய கடற்படையான கருங்கடல் கப்பற்படையைத் தாக்கவும், கிரிமியாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உள்ள துறைமுக நகரமான செவாஸ்டோபோலில் அதன் இருப்பிடத்திலிருந்து அதை அகற்றவும், கடல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த துணிச்சலான தாக்குதல் ரஷ்யாவை நிச்சயம் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு ரஷ்யா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.