பொங்கல் கொண்டாட்டம்:
தேசிய தைப்பொங்கல் விழாவையொட்டி, யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். தமிழ் கலாச்சார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அதிபருக்கு, இந்து சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
அதிபர் உரை:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, ”சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.
பிரச்சினைகளை ஒதுக்க முடியாது:
போரின் போது காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும். இலங்கைக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30-40 வருடங்களுக்கு மேலாக போர், மோதல்கள், குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும். வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய இருக்கிறோம். பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்றும் கோரியுள்ளேன்.
பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டோ, காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.
பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.
இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை கேட்டு இருந்தேன். உண்மையை கண்டறிவதை ராணுவமும் விரும்புகிறது. அதன் மூலம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போன்று தீவிரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
ராணுவம் சம்மதம்:
அதைதொடர்ந்து, ராணுவத்தால் ஆக்கிரமிப்பட்டதாக கூறப்படும் நிலம் தொடர்பாக ஆராய இருக்கிறோம். அதோடு யாழ்ப்பாணத்தில் நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆராயப்படும். யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ராணுவத்தினர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை உரிமையாளர்களிடம் வழங்க ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.
13வது திருத்தச் சட்டம்:
அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த உத்தேசித்துள்ளோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயல்படுத்த இருக்கிறோம். இதுதொடர்பான நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும். வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால், தமிழ், சிங்கள மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்”,என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் சொல்வது என்ன?
இலங்கைத் தமிழர் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியாக, 1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் உருவானது. அதன்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்பதும் அவை இரண்டையும் ஒரே மாகாணமாக இணைப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாணக் குழு ஒன்றும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய மாகாண சட்டமன்றம் அமைப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. தமிழர்களுக்கு என்று ஒரு மாகாணத்தை உருவாக்குவதன் மூலம், அவர்களது உரிமைகள் காக்கப்படும் என நம்பப்படுகிறது. ஆனால், சிங்கள அரசு இதனை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.