விமான விபத்து:


மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்கு உள்ளானது. பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான குழுவினரும் பயணம் செய்தனர். 


விபத்தில் சிக்கிய விமானம் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, விமானத்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் துரிதப்பட்டன. இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.


64 பேர் பலி:


இரவு நேரம் என்பதால் நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் காலையில் மீண்டும் தொடங்கப்பட்டன. அதைதொடர்ந்து, மேலும் 24 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 64-ஐ எட்டியுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோரின் உடலை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை எந்த ஒரு நபரையும் நாங்கள் உயிருடன் மீட்கவில்லை என, நேபாள ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5ல் 4 இந்தியர்கள் பலி:


விபத்துக்குள்ளான விமானத்தில் உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் பகுதியை சேர்ந்த 5 பேர், பாராகிளைடிங் செய்வதற்காக பொக்கார பகுதிக்கு பயணித்து இருந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணித்தவர்கள், அபிஷேக் குஷ்வஹா,  விஷால் ஷர்மா, அனில் குமார் ராஜ்பர், சஞ்சய ஜெய்ஷ்வால் மற்றும் சோனு ஜெய்ஷ்வால் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார்.


 






நேபாளத்தில் தொடரும் விமான விபத்துகள்:


1992ம் ஆண்டுக்கு பிறகு நேபாளத்தில் நடைபெற்ற மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச ஏர்லைன் ஏர்பஸ் விமானம், 1992ல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000-ஆவது ஆண்டில் இருந்து இதுவரை நேபாளத்தில் நேர்ந்த விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் மட்டும் 309 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டவர்கள் பயணம்:


இந்த விமானத்தில், 5 இந்தியர்கள், ரஷ்யாவை சேர்ந்த 4 பேர், தென் கொரியாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஐயர்லாந்தை சேர்ந்த ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில், விமானத்தில் பயணித்த 68 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேரும் பலியானதாகவும், யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.


விபத்து நடந்தது எப்படி?


தரையிறங்கும் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக  கூறப்படுகிறது. அதன்படி, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றபோது  தீ பிடித்து எரிந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்  தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.