இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறையால் அந்த நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் ராஜபக்சே பதவி விலகினார்.
இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய அமைச்சராக 4 பேர் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர். அரச சேவைகள் துறை அமைச்சராக தினேஷ் குணவர்தனா, வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், வலுசக்தி துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகரா, நகர அபிவிருத்தி துறை அமைச்சராக பிரசன்னா ரணதுங்கா பதவியேற்றுள்ளனர்.
முன்னதாக, இலங்கையில் பிரதமராக நேற்று ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அதேசமயத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்பட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில், புதியதாக 4 பேர் அமைச்சராக பொறுப்பு ஏற்றிருப்பது அந்த நாட்டு அரசியல் சூழலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வந்த போராட்டக்காரர்களை மஹிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே வீடு உள்பட 35 அமைச்சர்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். மேலும், இலங்கையின் எம்.பி. உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சூழலில், அந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று காலை தளர்த்தப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். பெட்ரோல் நிலையங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பின்னர் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.
மேலும் படிக்க : இலங்கை எம்.பி தற்கொலையா..? அடித்து கொலையா..? காவல்துறை அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
மேலும் படிக்க : Bald: வழுக்கைத் தலையை கிண்டல் செய்தால் பாலியல் குற்றம் - அதிரடி தீர்ப்பளித்த தீர்ப்பாயம் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்