இலங்கையில் ஒருவேளை உணவுக்குக்கூட கஷ்டப்படும் நிலையில் அநேக குடும்பங்கள் அங்கு வாழுகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் இல்லாமல் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கிறது. அவசர தேவைக்காக நோயாளிகளை கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது .
இந்நிலையில் இலங்கை மருத்துவர் சங்கமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது, கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது பிரசவ தேதிக்கு முன்னதாகவே அதாவது 15 நாட்களுக்கு முன்னரே அருகில் உள்ள மருத்துவமனைகளில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக நெடுந்தூரம் நடைபயணம் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல மாத கணக்கில், மக்கள் தங்களை வருத்திக் கொண்டு சுடும் வெயிலில், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தமது தேவைகளின் நிமித்தம் நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக, இலங்கையில் இருசக்கர வாகன பாவனை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் இல்லை. ஆதலால், விண்ணை முட்டும் விலையேற்றத்தில் 1500 ரூபாய் 2000 ரூபாய் 5000 ரூபாய் என்று அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு தொகை பணத்தை கொடுத்து பெட்ரோல் டீசல் வாங்குவதற்கு மக்கள் எங்கு செல்வார்கள் ,ஆகவே மக்கள் தற்போது சைக்கிள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இருந்தபோதும் சைக்கிளின் விலையால் அதனை வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சில வீடுகளில் தமது பழைய சைக்கிள்களை தேடிப்பிடித்து, தூசி தட்டி சரி செய்யும் நிகழ்வுகளையும் காண முடிகிறது. இலங்கையில் சாதாரண ஒரு சைக்கிள் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. மக்களே வாங்க முடியாத அளவில் விலையேற்றம் என்றால் அதனை யார்தான் வாங்குவார்கள்? 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு கூலி தொழிலாளி, தமது தேவைகளின் நிமித்தம் சைக்கிளில் சென்று வந்தார். ஆனால் தற்போது அந்த சைக்கிள் கூட இல்லாமல் அதனை வாங்குவதனை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் விலையேற்றம் என்பது இலங்கையில் தலை விரித்தாடத் தொடங்கி இருக்கிறது.
இலங்கையில் குறிப்பிட்ட ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் மக்கள் நம்பி இருந்தது இந்த சைக்கிளை மட்டும் தான். அங்கு பெரும்பாலான ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் வேலைக்கு செல்வதோ ,பாடசாலை செல்வதோ ,அருகில் இருக்கும் ஊருக்கு செல்லவோ சைக்கிளை மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். அது தவிர 20 வருடங்களுக்கு முன்னால் இருசக்கர வாகனம் என்பது மிகவும் குறைவு. இலங்கையை பொறுத்த அளவில் குறிப்பிட்ட ஒரு சில வீடுகளில் மட்டும் தான் இரு சக்கர வாகனத்தை காண முடியும். ஆனாலும் அப்போது ஒரு வீட்டில் குறைந்தது மூன்று சைக்கிள்கள் இருக்கும் ,காரணம் அங்கு இருப்பவர்கள் தங்களுடைய அன்றாட தேவைகளின் நிமித்தம் வெளியில் செல்வது என்றால் சைக்கிள்களை மாத்திரமே பயன்படுத்தி வந்தனர் .
அதாவது அந்த காலகட்டத்தில் குறிப்பாக கடந்த ஒரு 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சைக்கிளின் விலை 3000 ரூபாய் அளவில் இருந்தது. அப்போதே 3000 ரூபாயாக இருந்த ஒரு சாதாரண சைக்கிளின் விலை இன்று 50 ஆயிரம் ரூபாயாக மாற்றம் எடுத்திருக்கிறது. அதுதவிர, இலங்கையில் மாட்டு வண்டி பயணம் என்பது மிகவும் பிரபல்யமானது. இன்றளவும் கூட கிராமங்களில் நாம் மாட்டு வண்டிகளை காணலாம்.
அங்கு குறிப்பாக தமிழர், சிங்கள பிரதேசங்களில் பொதுவாக மாட்டு வண்டியும், சைக்கிளும் தான் அன்றைக்கு காண முடிந்தது. கால ஓட்டத்தில் இவை அனைத்தும் மறுவி முச்சக்கர வண்டி ,இருசக்கர வாகனம், கார்கள், வேன்கள் என வாகனங்களும் மாறத் தொடங்கின. இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் அந்த பழைய கலாச்சாரத்தை மக்கள் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் ஒரு சைக்கிளின் விலை என்பது 50 ஆயிரம் ரூபாய் எனக் கூறுவது எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான். ஆனாலும் எதுவுமே இல்லாத மக்களிடத்தில் ,சைக்கிள் இருந்தால் கூட ஏதாவது வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என எண்ணத் தோன்றும் இந்த சந்தர்ப்பத்தில் சைக்கிள் விற்பனையானது அங்கு சூடு பிடித்திருக்கிறது.
ஐம்பதாயிரம் ரூபாய் என்பது இருசக்கர வாகனத்தை நாம் வாங்குவதற்கான பாதியளவு பணமாகும். இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமையும் ,விலை ஏற்றமும் என்பது மக்களின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. சைக்கிள் வாங்குவதற்காக இலங்கையின் பல பிரதேசங்களில் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளவில் நாடி செல்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புதிய வடிவிலான, தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சைக்கிள்களின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போவதாக விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ,இந்த சின்ன சின்ன பொருட்களின் விலைகளை அரசு மட்டுப்படுத்தி குறைந்த விலையில் வழங்கினால் ,அவர்கள் வாழ்வாதாரத்தை தேடி கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்