புலம்பெயர் தமிழர்கள் கேட்கும், தமிழர்களின் பிரச்சனைக்கான  தீர்வை வழங்கினால், இலங்கைக்கான முதலீடுகளை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.

 

குறிப்பாக புலம்பெயர் தமிழர்களால் தான் இலங்கைக்கு விடிவு காலம் பிறக்கும் என நோர்வே சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார்.  மேலும் அங்கு ஓஸ்லோவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசி உள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினரை சாணக்கியன் சந்தித்து பேசி இருக்கிறார். தேபோல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்வில் முக்கியமாக யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இலங்கையில இடம் பெற்ற மனித உரிமை மீறல்களை எவ்வாறு சட்ட ரீதியாக முகம் கொடுப்பது, எவ்வாறு அவற்றுக்கான தீர்வை நாடுவது என இந்த நிகழ்வில் கலந்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 



 

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணம் என்ன? இதன் ஆரம்பப் புள்ளி எங்கே? இன்று எதனால் இந்த நிலைமைக்கு இலங்கை முகம் கொடுத்திருக்கிறது என பல்வேறு விசயங்கள் குறித்து புலம்பெயர் தமிழர்களிடம் விளக்கி இருக்கிறார். ஊழல் மோசடி, லஞ்சம் ஆகியவைதான் இலங்கையின் தற்போது நிலைக்கு காரணம் என பொதுமக்கள் கருதுவதாக கூறியுள்ள சாணக்கியன் ,அது அவ்வாறு இல்லை எனவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு வழங்காமல் இருப்பது தான் தற்போதைய இலங்கையின் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். 1948 ஆம் ஆண்டு காலப்பகுதி முதலே தமிழ் ,சிங்கள, முஸ்லிம் என இலங்கை மக்கள் வேறுபடுத்த பட்டதால்தான், அதன் தொடர்ச்சியாக தற்போது உள்நாட்டு பிரச்சினை தீவிரமடைந்து இருப்பதாக சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.

 

கடந்த 30 வருட கால சிவில் யுத்தம் காரணமாகவே நாடு இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணம் என அவர் புலம்பெயர் தமிழர்களிடம் விவரித்துள்ளார். இலங்கை தமிழர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டதும், அதன் பின்னரான யுத்தமுமே  இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு வழி வகுத்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டுகால யுத்தத்திற்கு கடன் பெற்று அதிக நிதி செலவிடப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததாக கூறிய பின்னர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் புலம்பெயர் தமிழர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 



 

மேலும் 73 வருடகாலமாக  தமிழர்கள் கோரிவரும் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் சர்வதேச நாடுகளில் வாழும்  13 லட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் அதிபர் கோத்தாபாய ராஜபக்ஷ, தற்போதைய பிரதமர்  ஆகியோர் பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் பதவி விலகாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால், புலம்பெயர் தமிழர்கள் இலங்கையை இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பார்கள் என சாணக்கியன் தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் திருப்பி உள்ளது. பிளவுபடாத இலங்கைக்குள் ஒரு நிரந்தர தீர்வை தமிழ் மக்கள் கோருவதாக  நோர்வேயில் புலம்பெயர் தமிழர்களிடம்  சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ள சாணக்கியன் இலங்கை மக்கள் முகம் கொடுக்கும் இந்த  கடுமையான பொருளாதார நெருக்கடியை கண்டு வேதனை அடைவதாக புலம்பெயர் தமிழர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 

இலங்கை மக்களின் தற்போதைய நிலை குறித்து அதிபர் கோத்தாபாய ராஜபக்சவுக்கோ, பிரதமருக்கோ அக்கறை இல்லை என சாணக்கியன் விமர்சித்துள்ளார். அதேபோல் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முடியும் எனவும் சாணக்கியன் தெரிவித்திருப்பது அரசியல் விமர்சகர்களை உற்று நோக்க வைத்திருக்கிறது. பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வை தாம் கோருவதாகவும், அவ்வாறு தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் நெருக்கடியை தீர்த்து வைப்பார்கள் என சாணக்கியன் உறுதி அளித்திருக்கிறார்.

 

இலங்கையின் 30 வருட கால யுத்தத்திற்கு உலக நாடுகளிடம் வாங்கிய கடன், தளவாட கொள்வனவு என நாட்டை கடன் நிலைக்கு தள்ளி ,ஆடம்பரச் செலவுகள் என ஆடம்பர அபிவிருத்தித் திட்டங்கள் என மேலும் மேலும் கடன்களை வாங்கிக் குவித்து 40 வருடகால இலங்கையின் அரசியல் கட்டமைப்பை சிதைத்துள்ளார்கள் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.