இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு அந்த நாட்டு அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் புகுந்து அதிபர் மாளிகையை தங்கள் வசமாக்கினர்.


ரணில் விக்ரமசிங்க பதவியேற்றும் போராட்டம்


மக்களின் போராட்டத்திற்கு பயந்து  அந்நாட்டின் அதிபர்  கோட்டபய ராஜபக்ச மாளிகையை விட்டு  தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து அதிபர் கோட்டபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.


தொடர்ந்து கோட்டபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் பதவி வகித்து வந்தார். தொடர்ந்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 134 வாக்குகள் பெற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.


எனினும் மக்கள் தங்கள் போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து புதிதாகப் பதவியேற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.


ஒடுக்கப்பட்ட போராட்டம்


இந்நிலையில், வன்முறையைக் கையிலெடுக்காமல் போராட்டம் நடத்தலாம் என சொல்லிக் கொண்டே மறுபுறம் போராட்டக் காரர்களை ஒடுக்கும் பணியில் ரணில் விக்ரமசிங்கே ஈடுபட்டார். குறிப்பாக காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அழித்தும், அதிபர் மாளிகை மற்றும் அரசு கட்டிடங்களில் புகுந்த போராட்டக்காரர்களை கைது செய்தும் கலக்கமூட்டினார்.


அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவ வீரர்கள் ஜூலை 22ஆம் தேதி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக காலி முகத்திடலில் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் ஆகஸ்டு 5ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


123 நாள்களுக்குப் பின் முடிவு


இந்நிலையில், காலி முகத்திடல் போராட்டத்தை முறைப்படி முடித்துக்கொள்வதாக நேற்று (ஆக.10) போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அத்துடன் திடலில் இருந்து வெளியேறும் பணிகளையும் அவர்கள் தொடங்கினர். இதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் 123 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்துள்ளது.


அதேநேரம் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவின் செய்தி தொடர்பாளர் மனோஜ் நாணயக்கார,  “போராட்டம் தொடரும் காலி முகத்திடலில் இருந்து வெளியேறலாம் என நாங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். இதனால் எங்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அர்த்தம் இல்லை. நாட்டின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும், அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.


காலி முகத்திடலில் போராட்டத்தை நாங்கள் முடித்துக்கொண்டாலும், இலங்கையில் அமைப்பு ரீதியான மாற்றத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் , காலி முகத்திடலில் போராட்டத்தை முடித்துக் கொண்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கையும் போராட்டக்காரர்கள் திரும்பப் பெற்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண