நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் தரணி உருவாக்கிய படத்தில் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் திரிஷாவைக் கடத்தியவரைக் கண்டுபிடிக்க போலீஸ் ஸ்டேஷன் செல்வார். அங்கே கடத்தியவரைப் பார்த்ததாகச் சொல்லும் பாண்டு அடையாளங்களைச் சொல்லவும் கம்ப்யூட்டரில் ஒருவர் வரையுவார். இறுதியில் விஜய் படத்துக்கு பதிலாக ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனின் படம் திரையில் தோன்றும்.. படத்தில் பார்க்க இதுபோன்ற ஆள்மாறாட்டச் சம்பவங்கள் சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது அது கொஞ்சம் முகம் சுளிக்கத்தான் வைக்கிறது. 





அப்படியான சம்பவம் அண்மையில் ஒரு அரசுப்பள்ளியில் நிகழ்ந்துள்ளது.பள்ளிகளில் பொதுவாக தேசத் தலைவர்கள், அறிவியல் விஞ்ஞானிகளின் புகைப்படங்களை சுவர்களில் மாட்டுவது வழக்கம். அந்த வரிசையில் பஞ்சாப் மாநிலத்தின் அரசுப் பள்ளி ஒன்றில் ஐன்ஸ்டீன் உட்பட அறிவியல் விஞ்ஞானிகள் பலரின் புகைப்படங்களை சுவற்றில் மாட்டியுள்ளனர்.ஆனால் நோபல் விஞ்ஞானிகளுக்கு இடையே எசகுபிசகாக ஒரு நெட்பிளிக்ஸ் கதாப்பாத்திரமும் இடம் பெற்றிருப்பது காண்பவரை சிரிக்கவைத்துள்ளது. 


நெட்பிளிக்ஸில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வந்த பிரேக்கிங் பேட் என்னும் தொடரின் நாயகன் பிரயன் கிரான்ஸ்டனின் புகைப்படத்தை அவர்கள் பள்ளியில் சுவற்றில் மாட்டியுள்ளனர்.





அதன் கீழ் விஞ்ஞானி வெர்னர் ஹெய்சன்பெர்க் எனப் பெயர் எழுதப்பட்டிருந்தது. உண்மையில் விஞ்ஞானி வெர்னர் ஹெய்சன்பெர்க் ஜெர்மனியைச் சேர்ந்தவர் குவாண்டம் இயற்பியலின் தவிர்க்கமுடியாத அங்கமாகக் கருதப்படுபவர். பிரேக்கிங் பேட்டில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஹெய்சன்பெர்க், அந்தக் கதாப்பாத்திரம் போதைப்பொருள் கடத்தல் தலைவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஹெய்சன்பெர்க் பெயரில் குழப்பம் ஏற்பட்டு அதற்கு பதில்தான் பிரயனின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு அறிவியல் விஞ்ஞானிக்கு பதிலாக ஹாலிவுட் நடிகரின் புகைப்படத்தை மாட்டிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. 


கண்ணதாசா? ஜேசுதாஸா? பாவம் அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு போல என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.