இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. இலங்கை அரசில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டங்கள் வன்முறையாக மாறி 8 பேர் பலியானதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து கடந்த திங்களன்று மகிந்த ராஜபக்சே அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார். ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கி தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே உயிருக்கு அஞ்சி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 


இதனிடையே இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டிருந்த நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனை தவிர்த்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்பார் என தெரியவந்துள்ளது.



யார் இந்த ரணில் விக்கிரமசிங்கே?


எஸ்மண்ட் விக்கிரமசிங்கே, மாலினி விக்கிரமசிங்கே ஆகியோரின் மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறந்த ரணில் விக்ரமசிங்கே தனது கல்வி படிப்புகளை கொழும்பு ராயல் கல்லூரியில் தொடர்ந்தார். அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் இருந்து அரசியல் பயணம் ஆரம்பமானது. அதன் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் போட்டியிட்டு 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக 1977ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 05 ஆம் தேதி அமைச்சரவைக்கு தேர்வாகி இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் அமைச்சராக அரசியல் பணியை தொடர்ந்தார். ரணில் விக்ரமசிங்கே தனது 28வது வயதில் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


1980ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் கல்வி அமைச்சர் பதவி ரணில் விக்ரமசிங்கேவிடம் கையளிக்கப்பட்டது. 9 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக முதன்முதலாக பதவி ஏற்றார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டார். 1995 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கேவை திருமணம் செய்துகொண்டார்.



சந்தித்த தேர்தல்கள்


1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன. 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி பெற்ற ஓராண்டுக்குள் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் தேதிதேர்தல் நடத்தப்பட்டு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் தேதி பிரதமரான ரணில் விக்ரமசிங்கே 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.


2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிட்டு 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தலில் தற்போது பதவி விலகிய மஹிந்த ராஜபக்சேவே வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி 6வது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக்சே களமிறங்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் இறுதிப்போரை வழி நடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலிலும், மஹிந்த ராஜபக்சேவே வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.



முழுமை பெறாத பிரதமர் பதவி:


தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொது வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலிவ் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று சிறிசேனா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன், மஹிந்த ராஜபக்சேவின் 10 ஆண்டு கால சாம்ராஜ்யமும் சரிந்தது. இதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.


எனினும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு மூலம் மகிந்த ராஜபசேவை, ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனா பிரதமராக்கினார். அதன் பின்னரான நீதிமன்ற நகர்வுகளையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததாலும், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், மூன்றாவது முறையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த முறை ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியை சந்தித்து நாடு முழுவதும் 2.15% வாக்குகளையே பெற்றது. நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை என்ற சாதனையை இன்றுவரை தக்கவைத்து வருகிறார். 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். மிகுந்த அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கே பலமுறை பிரதமர் பதவி வகித்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. என்பதோடு, ஜனாதிபதி பதவி என்பது அவரைப் பொறுத்த மட்டில் கைக்கு எட்டாத ஒன்றாகவே உள்ளது. இருந்தாலும் நடைபெறும் சலசலப்புகளுக்கு இடையே ஆறாவது முறையாக பிரதமராக இருக்கிறார், ரணில் விக்ரமசிங்கே.



இவர் செய்த சாதனைகள்:



  • இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர். 

  • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர். 

  • 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர். 

  • ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.

  • இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர். 

  • உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.  

  • 1989 இல் நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.



இவர் சாதனைகள்



  • இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.

  • இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.

  • இலங்கையில் இளைஞர்கள் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்தவர்.

  • இலங்கை பள்ளிகளில் அறநெறிக் கல்விக்கு வித்திட்டவர்.

  • கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர்.

  • இலங்கையில் அதிக முறை பிரதமராக இருந்தவர்.

  • போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் நியமன வழங்கலை தொடங்கியவர்.

  • இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தவர்.