பதவி ஏற்பு:

 

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவியேற்ற  நிலையில் , பிரதமராக தினேஷ் குணவர்தன பிரதமர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு முக்கிய அமைச்சர் பதவிகளை தன் வசம் வைத்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பதவியேற்ற புதிய அமைச்சரவையில் நிதி , பாதுகாப்பு  அமைச்சு பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முக்கிய அமைச்சகமான, வெளி விவகாரம்,கல்வி, சுகாதாரம், நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு  போன்ற அமைச்சக பதவிகள் ஒதுக்கப்பட்டன.

மேலும் முக்கிய அமைச்சக பதவிகளான பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள், விமான துறை போன்ற அமைச்சக பதவிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

 

ரணில் வசம்:

 

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் அதிபர்கள், தம் வசம் வைத்திருந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் பதவி  ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.  இம்முறை நிதி அமைச்சர் பதவியும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைகளிலேயே இருக்கிறது.

 

நாடாளுமன்றத்தில் வெற்றிடமாக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் நியமன எம்.பி வெற்றிடத்திற்கு, ஒருவரை நியமித்து விட்டு இடைக்கால அமைச்சரவையில் சிறிது மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. 

தொடர்ந்து இன்னும் ஒரு சில வாரங்களில் சர்வ கட்சி அரசுக்கான அமைச்சரவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியல் அமைப்பின் படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.


 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி காரணமாக, முன்னதாகவே பதில் அதிபராக பொறுப்பேற்ற போதே ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் பதவியை‌ வகித்து வந்தார். இருந்தபோதும் தற்போது அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் நிலையிலும் அந்த நிதி அமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.