இராமாயண கதையில் வரக்கூடிய ராவணன்தான் உலகில் பைலட் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை எங்களிடம் தாருங்கள் என மக்களிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


 இராமயண கதாபாத்திரத்தில் வரக்கூடிய ராமன் , இராவணன் தொடர்பான சர்ச்சைப் பேச்சுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் இந்தியர் அல்ல என்றும், அவர் ஒரு நேபாளி என்றும் தெரிவித்திருந்தார். மேலும் நேபாளத்தில் பிர்குஞ் மேற்கில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராமர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாடிய நிலையில் அது மிகப்பெரிய  சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பான கருத்தினை அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபாவே ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்தியா- நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு இருந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் இந்த சர்ச்சை முடிவத்திற்குள்ளாகவே இலங்கை அரசு, ராவணன் தான் உலகின் முதல் விமானி என்றும், அவர் முதன் முதலாக  விமானத்தில் பறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்து புராணத்தின் படி, ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக விமானம் மூலம் ராவணன் கடத்திச்சென்று இலங்கையில் சிறை வைத்ததாகக் கூறப்படுகிறது.  அதனால் ராவணன்தான் முதன்முதலில் விமானத்தைப் பயன்படுத்தினார், அவர்தான் உலகின் முதல் விமானி என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கைச் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‘‘மன்னர் ராவணன் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் அல்லது புத்தகம் இருந்தால் அதனை அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ராவணனின் பெருமை மற்றும் நம் நாட்டின் விமான ஆதிக்கத்தின் பாரம்பரியம் ஆகியவைக் குறித்து அரசு ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. எனவே உங்களின் ஆவணங்கள் அதற்கு உதவிகரமாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இப்படியான விளம்பரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இதோடு நாம் இராமாயணத்தில், இராவணன் இலங்கையின் அரக்கன் என்றுதான் நமக்கு தெரியும். ஆனால் இலங்கையில் ராவணன் என்பவர் சிறந்த ஆட்சியாளராகவும், சிறந்த அறிஞராகவும் அங்குள்ள மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ராவணன் சீதையை கடத்திச் செல்வதற்காக இந்தியா செல்லவில்லை என்றும், அது இந்திய தரப்பில் கூறப்படும் கட்டுக்கதை என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என இலங்கை அரசு குறிப்பிடுகிறது. எனவே இதுதொடர்பான போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டால் நிச்சயம்   ராவணன்தான் விமானத்தில் பறந்த முதல் மனிதர் என்றும், அவர் வில்லன் இல்லை எனவும், தலைச்சிறந்த ஆட்சியாளராகப் பணியாற்றினார் என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிரூபிப்போம் என்று இலங்கை அரசு கூறுகிறது