ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு, இந்தியர்களை மீட்க காபூலுக்கு விரைந்துள்ளது C-17 இந்திய விமானப்படை விமானம்


ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சண்டையில், தலிபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வருவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றியுள்ள காரணத்தால், அந்த நாட்டு மக்களும், அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் அந்த நாட்டை விட்டு வெளியேறினர்.


இந்த நிலையில், தலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். காபூல் நகரில் முக்கியமாக ஹமீது கர்சாய் விமான நிலையத்தில் இருந்துதான், வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வந்தது.




இந்த நிலையில், கூட்டாட்சி விமான நிர்வாகம் எனப்படும் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப்கானிஸ்தான் வான்வெளியில் 26 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஆப்கான் வான்வெளியில் 26 ஆயிரம் அடிக்கு கீழே பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆப்கான் செல்வதாக அறிவித்திருந்த ஏர்-இந்தியா விமானமும் ரத்து செய்யப்படுவதாக அந்த நாட்டு விமான நிறுவனம் அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் வான்வெளியை அமெரிக்க ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக், எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ஆப்கானுக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தங்களது விமான சேவையை தொடங்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.




மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வெளியில் செல்லும் கனடா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானங்களும் 26 ஆயிரம் அடிக்கு மேல் பறக்க வேண்டும் என்று தங்களது நாட்டு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அந்த நாட்டுமக்கள் முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையத்திலே பலரும் தங்களது குடும்பத்தினருடன் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், சிலர் அமெரிக்காவின் ராணுவ விமானத்தின் டயரை பிடித்துக்கொண்டு பறந்து சென்று கீழே விழுந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.