இலங்கையைச் சேர்ந்த பிரபல புதின ஆசிரியர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான 2022 புக்கர் பரிசை வென்றிருக்கிறார். புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும்  ஆங்கிலத்திலேயே எழுதி இங்கிலாந்திலோ, அயர்லாந்திலோ வெளியிடப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. 50,000 யூரோவான புக்கர் பரிசுக்காக அளிக்கப்படும் தொகையையும் பெற்றுள்ளார்.


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை புக்கர் விருது குழு பரிசீலித்தது. இதில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா" (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள் -  'The Seven Moons of Maali Almeida'. ) என்ற புனைவுக் கதைக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இந்த நாவல், விடுதலைப் புலிகள் - இலங்கை ராணுவம் இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் குறித்து விவரிக்கப்பட்டு, இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுக் கதையாக எழுதப்பட்டுள்ளது. 


இந்த விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள பிரபல ரவுண்ட்ஹவுஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும் ராணியுமான கமீலா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புக்கர் பரிசு பெற்ற வெற்றியாளர் ஷெஹான் கருணாதிலக £50,000 பரிசுத் தொகையையும் பெறுகிறார். 


கருணதிலக இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். இவரது முதல் நாவல் 2011ல் வெளியானது. அதன் பெயர் சைனாமேன். இவரது படைப்புகள் ரோலிங் ஸ்டோன், ஜிக்யூ, நேஷனல் ஜாக்கிரஃபிக் வெளியீடுகளான வெளிவந்திருக்கின்றன. புக்கர் விருதுக்காக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட 5 பேரில் க்ளோரி என்ற நாவலை எழுதிய ஜிம்பாப்வே நாட்டின் நாவலுக்காக நோவயலட் புலவாயோ, தி ட்ரீஸ் என்ற நாவலை எழுதிய பெர்சிவல் எவரெட், ட்ரீசல் வாக்கர் என்ற நாவலை எழுதிய ஆங்கிலேய எழுத்தாளர் ஆலன் கார்னர், ஸ்மால் திங்க்ஸ் லைக் தீஸ் என்ற நாவலை எழுதிய ஐரிஷ் நாட்டின் க்ளேர் கீகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


புக்கர் பரிசு, சர்வதேச புக்கர் பரிசு வேறுபாடு அறிவோம்:


புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு இன்னொன்று சர்வதேச புக்கர் பரிசு.  ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதே வேளையில் அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுகளுக்கான  நோக்கம்  பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவதே என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலில் புக்கர் பரிசு குறித்து விரிவாகப் பார்ப்போம். ஏற்கெனவே கூறியது போல் புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைவுக் கதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருது. இது முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கூடும் நிர்ணயிக்கப்பட்ட நடுவர்கள் குழு அந்த ஆண்டின் சிறந்த படைப்பை முடிவு செய்து அறிவிக்கும். அந்த படைப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். முதலில் ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 12 படைப்புகள் இடம்பெறும். தி ‘புக்கர் டசன்’ என்று இவை அழைக்கப்படும். இதில் இடம்பெறுவதையே எழுத்தாளர்கள் கெளரவமாகக் கருதுகின்றனர். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும், பின்னர் அதிலிருந்து ஆறு புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் அக்டோபரில் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.


அதே வேளையில், சர்வதேச புக்கர் பரிசு 2005 இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த இந்தப் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது, ஆலிஸ் மன்ரோ, லிடியா டேவிஸ் மற்றும் பிலிப் ரோத் ஆகியோர் ஆரம்பகால வெற்றியாளர்களில் சிலர். 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது.


புதிய விதிகளின்படி மற்றொரு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில், ஆண்டுதோறும் ஒரு சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடுகிறது. £50,000 பரிசுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.


தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய், மிட்நைட்ஸ் சில்ட்ரன் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ் எழுதிய கிரண் தேசாய் மற்றும் ‘தி ஒயிட் டைகர் எழுதிய அரவிந்த் அடிகா போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் கடந்த காலங்களில் புக்கர் பரிசை வென்றுள்ளனர். சர்வதேச புக்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கீதாஞ்சலி ஸ்ரீ. 'Tomb of Sand' புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் விருது அளிக்கப்பட்டிருந்தது.