மருந்து பொருட்களின் கையிருப்பு குறைந்தது:


இலங்கையில் மருந்து பொருட்களின் கையிருப்பு குறைந்து வருவதாக இலங்கை மருத்துவர் சங்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நேரடியாக தெரிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் பற்றாக்குறை, உணவு  பற்றாக்குறையைத் தாண்டி தற்போது மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவர் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது கையிருப்பும் முடிவடைவதாக மருத்துவர் சங்கம் தெரிவித்திருக்கிறது . இந்நிலையில் உடனடியாக மருந்து தேவைகளை பூர்த்தி செய்யுமாறு, பிரதமரிடம் மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


உடனடி நடவடிக்கை தேவை:


மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வெகு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை மருத்துவர் சங்கம், இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மிகப்பெரும் அவலங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டி உள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர கால மருந்துகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் அவற்றுக்கு தற்போது தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது இரு வாரங்களுக்குரிய மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் அவற்றை சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலை தற்போது காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.


அடிப்படை வசதிகள் இல்லை:


இரண்டு வாரங்களில் தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் நிறைவடையும் பட்சத்தில் ,மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் அவசர மருத்துவ சிகிச்சை இல்லாமல் இறக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையைப் பொறுத்த அளவில் மருத்துவத்துறை என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தான் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. பெரும்பாலான மக்கள் இந்த ஆங்கில மருத்துவத்துறையை நம்பித்தான் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு காலத்தில் ஆயுர்வேதம், சித்தா, நாட்டு வைத்திய முறைகள் தழைத்தோங்கி  இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவை முற்று முழுதாக முடக்கப்பட்டு மக்கள் ஆங்கில மருத்துவத்தை நாட தொடங்கினார்கள். பொதுவாக இலங்கையின் மாவட்டத்தின் மத்தியில் மட்டுமே ஒரு அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை உள்ளது. கிராமங்களில் அவசர தேவைகளுக்கான வசதிகள் இல்லை. கிராமிய மருத்துவமனைகள் பெயரளவில் இருந்தாலும் அவற்றில் சிகிச்சைக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆகவே நோயாளிகளை மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.


சிகிச்சை அளிப்பதில் சிக்கல்:


இவ்வாறான பொருளாதார  ,எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வாகன வசதிகள் இல்லை, அவசரத்துக்கு முச்சக்கர வண்டிகளில் ஏற்றி சென்றாலும் அதற்கும் எரிபொருள் இல்லை. இவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது . அதேபோல் மேலதிக  சிகிச்சை, ஸ்கேன் என்றால் கொழும்பில் உள்ள  மத்திய அரச மருத்துவமனையை நோக்கித்தான் எல்லோரும்  செல்ல வேண்டும். ஆகவே குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே உயரிய சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சை பெற தலைநகர் பகுதியான கொழும்புக்கு  செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இலங்கை முற்று முழுதுமாக முடங்கிப் போயிருக்கிற சூழ்நிலையில் ,நோயாளிகள் கர்ப்பிணிமார்கள் ,அவசர தேவை உடையோர் என இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல்  போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் வெளியூர்களிலிருந்து மருத்துவமனைக்கு செவிலியர்கள் மருத்துவர்கள் வருவதிலும் பிரச்சனை நிலவுகிறது. கடந்த இரு வாரங்களில் அதிகளவான பிரசவங்கள் வீடுகளிலேயே நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால், வெளியே மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு வருவதற்கு வசதி இல்லை. ஆகவே அங்கிருக்கும்  வசதிகளைக் கொண்டு வீடுகளிலேயே பிரசவத்தை நடத்தி இருக்கிறார்கள் .




நூற்றுக்கணக்கான பிரசவங்கள் இவ்வாறு வீடுகளிலேயே நடைபெற்றிருக்கின்றன. வீடுகளில் பிரசவங்கள் நடைபெறும் பட்சத்தில் தாய்க்கும் , குழந்தைக்குமான சிகிச்சைகள் தேவையான கண்காணிப்புகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், ஆபரேஷன் பண்ண வேண்டியவர்கள், இதய நோயாளிகள் என இவ்வாறு பலதரப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது சிகிச்சை எவ்வாறு வழங்குவது என மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.


வெளிநாடுகளை நம்பி:


வெளிநாடுகளை நம்பி தான் இலங்கையில் மருத்துவத்துறை நடைபெற்று வருகிறது. ஆகவே மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்று சொல்லப்படுகிறது. இருக்கும் மருந்தை கொண்டு மருத்துவர்கள் நோயாளிகளை கவனித்து வருகிறார்கள், ஆனால் கையிருப்பு முடிவடையும் நிலையில் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் பிரதமரை நாடியிருக்கிறது இலங்கை மருத்துவர் சங்கம்.